தோனியின் இடம் குறித்து கருத்து தெரிவித்த தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே., பிரசாத்திற்கு ரசிகர்கள் சமூகவலைதளத்தில் பதிலடி தந்துள்ளனர்.
இந்திய அணி முன்னாள் கேப்டன் தோனி, 36. இந்திய அணிக்கு மூன்று உலக கோப்பை வென்று தந்தவர். சமீபத்தில், வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடந்த ஒரு நாள் தொடரில் 4 இன்னிங்சில் 154 ரன்கள் எடுத்தார். இதன் 4வது போட்டியில் 114 பந்தில் 54 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இந்நிலையில், இலங்கைக்கு எதிராக வரும் 20ல் துவங்கும் ஒரு நாள் தொடரில் தோனி தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இது குறித்து இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே., பிரசாத் கூறுகையில்,‘ தோனி உள்ளிட்ட அனைத்து வீரர்களின் செயல்பாடு குறித்தும் விவாதித்தோம். இவர் சிறப்பாக விளையாடவில்லை எனில், வேறு வீரர் தேர்வு செய்யப்படுவார்,’’ என்றார்.
இவரது விமர்சனம் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. ‘டுவிட்டரில்’ ரசிகர்கள் வெளியிட்ட கருத்துகள்:
* எம்.எஸ்.கே., பிரசாத்தை ஒரு ‘ஸ்டம்பிங்’ செய்ய சொல்ல வேண்டும். இவரின் செயல்பாட்டை பார்க்கும்போது, மைதானத்திற்குள் அனுமதிக்கவே முடியாது.
* தோனியை கேப்டன் பதவியிலிருந்து விலக வைத்தனர். தற்போது, சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு பெற நெருக்கடி தருகின்றனர்.
* 6 டெஸ்ட், 17 ஒரு நாள் போட்டியில் மட்டுமே பிரசாத் விளையாடி உள்ளார். இவர் எப்படி தோனி, ரெய்னா, யுவராஜ் ஆகியோரின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்கிறார்.
* தோனியின் செயல்பாட்டை கணிப்பதற்கு நீங்கள் யார். நீங்கள் ஒரு தேர்வுக்குழு தலைவர் மட்டுமே. ஆனால், தோனி எங்களைப்போன்றவர்களுக்கு ஊக்கம் தருபவர்.
இவ்வாறு பல ரசிகர்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
இந்திய வீரர் தோனி ‘பசிபிக் ஸ்போர்ட்ஸ் கிளப்புடன்’ இணைந்து துபாயில் பயிற்சி அகாடமி துவங்க உள்ளார். இது, எம்.எஸ்., தோனி கிரிக்கெட் அகாடமி என அழைக்கப்படும்.
தோனி கூறுகையில்,‘‘ விளையாட்டுத்துறையில் சிறியது முதல் மிகப்பெரிய அளவிலான முறையில் வணிகம் செய்யப்படுகிறது. ‘ஸ்போர்ட்ஸ் கிளப்பில்’ நானும் இணைவதில் மகிழ்ச்சி. இது வெற்றி பெற என்னால் முடிந்த பங்களிப்பை தருவேன்,’’ என்றார்.
ஏற்கனவே அகாடமி வைத்துள்ள சேவக், யுவராஜ் சிங், ஹர்பஜன் வரிசையில் தோனியும் இணைந்தார்