ஐக்கிய அமீரகம், துபாய் செல்லும் எமிரேட்ஸ் விமானத்தில் பயணிகளுக்கு பரிமாறப்பட்ட மதுவை பணிப்பெண் ஒருவர் மீண்டும் போத்தலில் நிரப்பும் காட்சிகள் வீடியோவாக வெளியாகி வைரலாகியுள்ளது.
ஐக்கிய அமீரகத்தின் பிரசித்திபெற்ற விமான சேவை நிறுவனம் எமிரேட்ஸ்.
உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சேவை வழங்கி வரும் இந்த நிறுவனத்தின் விமானங்களில் பயணிக்கவே பெரும்பாலான பயணிகள் விரும்புவர்.
சம்பவத்தன்று ரஷ்யாவின் மாஸ்கோவில் இருந்து எமிரேட்ஸ் விமான சேவை நிறுவனத்தின் விமானம் ஒன்று துபாய் நோக்கி சென்றுகொண்டிருந்தது.
அதில் ரஷ்ய பயணி ஒருவர் காட்சிகளை தமது கமெராவில் படம்பிடித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் அவர் பதிவு செய்த காட்சியில் ஒன்று அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
குறித்த காணொளியில் பணிப்பெண் ஒருவர் கோப்பையில் ஊற்றப்பட்ட மதுவை மீண்டும் போத்தலில் நிரப்பும் காட்சிகள் பதிவாகியிருந்தது.
இந்த காணொளியை சமூக வலைதளத்தில் பதிவேற்றிய அந்த ரஷ்ய பயணி, பொதுவாகவே நீங்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளீர்களா எமிரேட்ஸ் என கேள்வி எழுப்பியுள்ளார்.
எமிரேட்ஸ் விமானத்தின் உயர்ரக வகுப்பில் இச்செயல் அரங்கேறியுள்ளது.
குறிப்பிட்ட காணொளி குறித்து விளக்கமளித்துள்ள எமிரேட்ஸ், தங்களின் தரத்தில் எந்த குறைபாடும் இருக்கப்போவதில்லை. இருப்பினும் குற்றச்சாட்டு எழுந்துள்ள சம்பவம் தொடர்பில் விசாரிக்கப்படும் என தெரிவித்துள்ளது.