Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

மகத்தான படங்களை இயக்கிய மகேந்திரன்!

July 15, 2017
in Cinema
0

இயக்குநர் மகேந்திரனைப் பற்றிப் பேசாமல் தமிழ்த் திரைப்படங்களைப் பற்றிய எவ்வோர் உரையாடலோ கட்டுரைத் தொடரோ முழுமை பெற்றுவிடாது. தம் படங்களின் வழியாக வாழ்வின் மன நடுக்கோட்டைப் பிடித்துச் சென்றவர் மகேந்திரன். அவருடைய படங்கள் வெளியான காலகட்டத்தில் அவற்றின் பொருண்மை குறித்து தமிழ்ச் சமூகத்தில் போதுமான உரையாடல்கள் நிகழ்ந்தனவா என்பது நமக்குத் தெரியவில்லை. இல்லை என்றே தோன்றுகிறது. ஆனால், அவர் முனைந்து செயல்பட்ட காலத்திற்குப் பிறகு அவருடைய படங்களின் மதிப்பு மேன்மேலும் உயர்ந்துகொண்டே செல்கிறது. ஏன் மகேந்திரன் இன்றியமையாத ஓர் இயக்குநராக அறியப்படுகிறார் ? அவரைவிடவும் சிறப்பாக இயக்கியவர்கள் பலர் இருக்கின்றார்களே. ஆம், மகேந்திரனை விடவும் சிறப்பான இயக்குநர்கள் இருக்கிறார்கள்தாம். ஆனால், இங்கே மகேந்திரன் முன்னிற்கவில்லை. மகேந்திரன் இயக்கிய படங்கள் முன்னிற்கின்றன. கதை மாந்தர்களின் ஆழ்மனத்தைக் காட்சிப்படுத்தி, அதையே கலையாக்கி அவர் தம் படங்களில் வைத்துச் சென்றுள்ளார். கதை மாந்தர்களின் மனங்களை நமக்கு அடையாளம் காணத் தெரிந்துவிட்டது.

எழுதத் தெரிந்தவர் இயக்குநராய் வடிவெடுப்பதில் பலப்பல அருமைகள் வாய்க்கும் என்பதற்கு மகேந்திரன் நல்ல எடுத்துக்காட்டு. ஒரு கதைக்கு என்ன நியாயம் செய்ய வேண்டும் என்பதுதான் இயக்குநரின் வேலையே. தொடக்கத்தில் பல்வேறு படங்களுக்குக் கதையும் உரையாடலும் எழுதித் தந்தவர் மகேந்திரன். சிவாஜி கணேசனின் உரக்கப் பேசும் உரையாடல்களுக்குப் பெயர் பெற்ற தங்கப்பதக்கம் படத்திற்கு எழுதியவர். அவ்வரிசையில் ரிஷிமூலம், ஆடுபுலி ஆட்டம், காளி, பகலில் ஒரு இரவு என எண்ணற்ற படங்கள். ‘முள்ளும் மலரும்’ மூலம் இயக்குநர் ஆனார். முள்ளும் மலரும், உதிரிப் பூக்கள், பூட்டாத பூட்டுகள், ஜானி, நண்டு, மெட்டி, நெஞ்சத்தைக் கிள்ளாதே ஆகிய படங்கள் அவருடைய இயக்கத்தில் வரிசையாக வந்தன. ஒவ்வொன்றும் ஒன்றையொன்று விஞ்சும் தரத்திலானவை. தற்காலத்தினர் இப்படங்களைத் தவறவிடாமல் பார்க்க வேண்டும். ஓர் எழுத்தாளராக மகேந்திரன் தம் படங்களை இயல்பு குலையாமல் எடுப்பதற்குத்தான் தீர்மானம் செய்திருப்பார். கதை மாந்தர்களின் வாழ்க்கையை உள்ளது உள்ளவாறே உரைத்தல் என்பதே அவருடைய இயக்கம். வாழ்க்கைச் சுழலில் சிக்கிக் கிடக்கும் பாத்திரங்களின் எளிய தோற்றங்களையும், நினைப்புக்கும் வாழ்க்கைக்குமுள்ள இடைவெளியையும், துயரத்தின் கனத்த அமைதியையும், கையறு நிலையில் வெறுமனே பார்த்து நிற்றலையும் அவர் காட்சிப்படுத்துவதன் வழியாகவே பார்வையாளர்களுக்குள் ஒரு கலையுணர்ச்சியை வருவிக்கிறார். அவற்றையே அவர் தம் திரைமொழியாக ஆக்கிக்கொண்ட பிறகு மேலும் இரண்டு வித்தகங்கள் அவர் படங்களுக்குத் தோள்கொடுக்கின்றன. ஒளிப்பதிவும் இசையமைப்பும்தாம் அவ்விரண்டு.

மகேந்திரனின் படங்களை இளையராஜாவின் இசை கலைச்செப்பம் செய்து தந்தது. முள்ளும் மலரும் பின்னணி இசையில் இளையராஜா விட்டுச் சென்ற மௌனப் பொழுதுகள்தாம் பார்வையாளர்களைத் திரையை நோக்கி உற்றுப் பார்க்க வைத்தன. அந்த உற்று நோக்கலே உணர்வுகளைக் கட்டிவிட்டது. உதிரிப் பூக்களின் கருவிசை (தீம் மியூசிக்) இளையராஜாவின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்று. நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்திலும் இசைக்கே முதலிடம். மகேந்திரன் படங்களில் இளையராஜா செய்து காட்டிய வித்தகங்கள் என்றே தனிப்பொருளில் எழுதிச் செல்லலாம். பின்னணி இசையோடு நிறுத்திக்கொண்டோம், பாடல் வளங்களை நாளெல்லாம் பேசிக்கொண்டிருக்கலாம். ‘சங்கம் காணாதது தமிழும் அல்ல… தனை அறியாதவள் தாயும் அல்ல…’ என்பதுதான் தாய்மைக்கே இலக்கணம். மகேந்திரன் படங்களுக்கு வாய்த்த இன்னொரு வித்தகம் ஒளிப்பதிவு. முள்ளும் மலரும் பாலுமகேந்திராவின் கலைவண்ணம். கிட்டத்தட்ட அப்படத்தைத் தம் படம்போன்ற மொழியில் பாலுமகேந்திரா கையாண்டிருப்பதைக் காணலாம். உதிரிப் பூக்களில் அசோக்குமார். தமிழ்த் திரையுலகின் புகழ் பாடப்படாத நாயகர்களின் பட்டியலில் அசோக்குமாரைச் சேர்க்கலாம். மகேந்திரன் எடுக்க நினைத்தது அசோக்குமாரின் கோணத்தில் அருமையான சுடுவுகளாக அமைந்தன. இன்றைக்கும் உதிரிப் பூக்கள் படமாக்கப்பட்ட மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுத் திக்கம் நான் அடிக்கடி செல்வதுண்டு. அந்தப் பகுதியே உதிரிப்பூக்கள் நிகழ்ந்த களமாகத்தான் எனக்குத் தென்படுகிறது. பெருவெள்ளம் சுழித்தோடும் பவானி ஆற்றங்கரையில் தாய்தந்தையற்ற இரண்டு மழலைச் செல்வங்கள் நடந்து செல்வதைப்போன்ற காட்சிப்பிழை அங்கே ஏற்படுவதுண்டு. அருமையாய் எடுக்கப்பட்ட எண்ணற்ற தமிழ்ப்படங்கள் வெற்றி பெறாமல் தோற்றுப் போயிருக்கின்றன. அதற்கு எதைக் காரணம் காட்டுவது ? கடவுளின் இருப்பு இல்லாமையைப் போன்றே விடை தெரியாத ஒன்று அது. அப்படித் தோற்றுப் போன படங்களில் தலையாயது என்று மகேந்திரனின் ‘பூட்டாத பூட்டுகள்’ படத்தைத்தான் சொல்வேன். மகேந்திரன் எடுத்த எந்தப் படத்தையும் விட்டுக்கொடுப்பேன். பூட்டாத பூட்டுகளை என்னால் விட்டுக்கொடுக்கவே இயலாது. அது எழுத்தாளர் பொன்னீலனின் கதை. திருமணமான பெண்ணொருத்தியின் மனத்தை அவ்வூர்க்கு வரும் ஓர் இளைஞன் கவர்ந்துவிடுவான். பிறகு ஊரைவிட்டு வெளியேறுவான் அவ்விளைஞன். தானுற்ற உணர்வுகளை உண்மையென்று நம்பும் அப்பெண் தன் வீட்டைத் துறந்து அவ்விளைஞனின் வீட்டுக்கே சென்று நிற்பாள். அங்கே அவளுக்கு வரவேற்பிருக்காது. இளைஞனும் புறக்கணிப்பான். “இங்கே எதுக்கு வந்தே ?” என்றுதான் கேட்பான். “நம்மப் பத்தி ஊர்ல எல்லாருக்கும் தெரிஞ்சி போச்சு. இனிமே உங்களோட வாழ்றதைத்தவிர வேற வழியே இல்லை” என்பாள் அவள். “உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு குடும்பம் நடத்த முடியுமா ? பழகினோம் கொண்டோம்னா அது வேற விசயம். முதல்ல ஊர் போய்ச் சேரு… உன்னோட நிக்கறத மத்தவங்க பார்த்தாங்கன்னா என் பேரு கெட்டுப்போயிடும்…” என்பான் அவன். உயிரைத் துறக்கும் வலிவற்ற அப்பெண் தன் கணவனிடமே திரும்பிவிடுவாள். ஓரளவுக்கு நினைவிலிருந்து எழுதியுள்ளேன், இந்தக் கதையை மகேந்திரனின் இயக்கத்தில் ராஜாவின் பின்னணியிசையில் எண்ணிப் பாருங்கள்.

மகேந்திரன் எழுத்தாளர்களின் ஆக்கங்களிலிருந்து ஓரிழையை எடுத்துக்கொண்டு திரைக்கதை எழுதுபவர். கடைசியாக அவர் எடுத்த சாசனம் திரைப்படத்திற்கும் கந்தர்வனின் சாசனம் கதைக்கும் ஏதொரு தொடர்பையும் காண முடியவில்லை. அவர் ஒரு கதையில் தோன்றும் பாத்திரங்களால் கவரப்படுகிறார். அவர்களைக்கொண்டு தமக்கான திரைக்கதையை வடித்தெடுக்கிறார். நண்டு என்னும் படம் மட்டும் சிவசங்கரியின் எழுத்தை ஓரளவு ஒட்டியதாக அமைந்திருக்கக்கூடும். நம் கதைக் களஞ்சியங்களில் அவ்வளவு மனிதர்கள் நகமும் தசையுமாக நடமாடுகிறார்கள். அவற்றில் பட்டு நூலெடுத்து வித்தை செய்யும் மாபெரும் கலைஞராக மகேந்திரன் ஒருவரே தென்படுகிறார்.

Previous Post

நல்ல கதைக்கு ‘ஒரு குப்பை கதை’ன்னு பேரு வச்சது ஏன்?

Next Post

யார் ஊரில் யார் முதலாளி?

Next Post

யார் ஊரில் யார் முதலாளி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures