மகளிர் கிரிக்கெட்டை முன்னேற்றத்திற்காக நடத்தப்பட்டு வரும் ‘பெயார் பிரேக்’ அழைப்பு இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் பெல்கொன்ஸ் மகளிர் அணிக்காக விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணித்தலைவியான சமரி அத்தபத்து முதலாவது சதமடித்து சாதனை படைத்தார்.
முப்பதிற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 90 கிரிக்கெட் வீராங்கனைகள் கிரிக்கெட் விளையாட்டை மென்மேலும் ஊக்குவிக்கும் நோக்கத்தைக் கொண்டு 6 அணிகள் பங்கேற்கும் ‘பெயார் பிரேக்’ ( FAIR BREAK) இருபதுக்கு 20 மகளிர் கிரிக்கெட் தொடர் நேற்று (04) துபாயில் ஆரம்பமானது.
இப்போட்டித் தொடரின் அனைத்துப் போட்டிகளும் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மே 4-15 வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், நேற்றைய தினம் ஆரம்பமான இப்போட்டித் தொடரின் முதலாவது போட்டியில் வோரியர்ஸ் வுமன் அணியை எதிர்த்தாடிய பெல்கொன்ஸ் மகளிர் அணி சமரி அத்தபத்துவின் அதிரடி சதத்தின் உதவியுடன் 8 விக்கெட்டுக்களால் அபார வெற்றியை ஈட்டியது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய வோரியர்ஸ் மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 177 ஓட்டங்களை குவித்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பில் ஜோர்ஜியா ரெட்மெய்ன் ஆட்டமிழக்காமல் 80 ஓட்டங்களையும், ஹேலி மெத்தியூஸ் 58 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாகப் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் மரிக்கோ ஹில், சோர்னரின் திப்போச் இருவரும் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
178 ஓட்டங்களை வெற்றி இலக்காக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடுவதற்காக பெல்கொன்ஸ் மகளிர் அணி சார்பில் அணித்தலைவி சுசீ பேட்ஸ் மற்றும் சமரி அத்தபத்து ஆகியோர் ஆரம்ப ஜோடியாக களமிறங்கியது.
இவர்கள் இருவரும் எதிரணி பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்யும் விதமாக சிக்ஸர்கள் , பவுண்டரிகள் என விளாசியிருந்தனர். இந்த ஜோடி தமக்கிடையில் 133 ஓட்டங்களை பகிர்ந்திருந்தபோது 43 பந்துகளில் 60 ஓட்டங்களை பெற்ற சுசீ பேட்ஸ் ஆட்டமிழந்தார். சமரி அத்தபத்து 55 பந்துகளில் சிக்ஸர்கள் 13 பவுண்டரிகள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 107 ஓட்டங்களை பெற்று தமது அணியின் வெற்றிக்கு பெரும் பங்காற்றினார்.
இப்போட்டியில் பெல்கொன்ஸ் அணி 18.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்த நிலையில் 178 ஓட்டங்களை பெற்று 8 விக்கெட்டுக்களால் இலகுவான வெற்றியை ஈட்டியது.