கடந்த சில தினங்களாக மலையாள சினிமாவில் உள்ள பெண்கள் நல அமைப்பு மீது தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டு வருகின்றன.. இதுவரை அப்படி குற்றச்சாட்டுகளை கூறியுள்ள இரண்டு பெண்களும் அதில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் தான்.
கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு மலையாள நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு துன்புறுத்தபட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். அவரை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என பார்வதி, ரம்யா நம்பீசன், ரீமா கலிங்கல் உள்ளிட்ட சில நடிகைகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து நடிகர் சங்கத்திலிருந்து விலகி 2017ல் சினிமா பெண்கள் நல அமைப்பு ஒன்றையும் துவங்கினார்கள். இதில் பெண் தொழில்நுட்ப கலைஞர்கள் சிலரும் இணைந்தனர்.
இந்த அமைப்பில் தான் சக கலைஞர்கள் மீது பாரபட்சம் காட்டப்படுவதாகவும், சீனியரான ஒரு சிலர் சாதாரண கலைஞர்களை மிரட்டுவது போன்ற அதிகார தோரணையுடன் நடந்து கொள்கிறார்கள் என்றும் இயக்குனர் விது வின்சென்ட் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஸ்டெபி ஜோசப் ஆகியோர் குற்றம் சாட்டியிருந்தனர்.
இதுபற்றி தனது Iவிட்டர் பக்கத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நடிகை பார்வதி பதில் அளித்துள்ளார். “சினிமா பெண்கள் நல அமைப்பில் அனைவருக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மிகவும் கவுரமான முறையில் அனைவரையும் கலந்தாலோசித்தே முடிவுகள் எடுக்கப்படுகின்றன.. இப்போது திடீரென கூறப்படும் குற்றச்சாட்டுக்களை குறித்து கேட்டால், பெண்களுக்கு எதிராக ஆண்கள் நடத்தும் விளையாட்டு உங்களுக்கு தெரியாதா என்ன..? எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும்” என பதில் கூறியுள்ளார் பார்வதி.

