மிக மிக அவசரம் படத்தில் நடித்த ஸ்ரீப்ரியங்கா, தன் முதல் பட அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
சினிமாவுக்கு வந்தது வாய்ப்பாக அமைந்ததா… தேடிக் கிடைத்ததா?
கல்லுாரியில் முதல் ஆண்டு படித்தபோது, சினிமா வாய்ப்பு வந்தது; ஏற்றுக் கொண்டேன். தற்போது தொலைதுாரக்கல்வி மூலம், பி.காம்., படிக்கிறேன். முதல் படமே நாயகிக்கு முக்கியத்துவம் உடைய படமாகி விட்டது.
தொடர்ந்து எந்த மாதிரி கதைகளில் பயணிக்க உள்ளீர்கள்?
கவர்ச்சி பொம்மையாக வந்து போகும் கதைகளாக இல்லாமல், மக்களுக்கு நல்ல விஷயத்தை சொல்லக்கூடிய படமாக இருக்க வேண்டும். நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாக இருந்தாலும், மக்களுக்கு நல்லதாக இருக்க வேண்டும். குறிப்பாக, அரசியல் இல்லாமல் இருக்க வேண்டும்.
திரைத்துறையில் ஏதாவது ஒன்றை மாற்ற வேண்டும் என்றால் எதை மாற்றுவீர்கள்?
திரைத்துறையையே மாற்ற வேண்டும்.
நடிகையர், ‘போட்டோ ஷூட்’ நடத்துவது பற்றி உங்கள் கருத்து?
அந்த மாதிரி நான் எதுவும் செய்வதில்லை. மற்றவர்கள் அவ்வாறு நடப்பது என்பது, அவர்களது விருப்பம். என்னைப் பொறுத்தவரை அந்த மாதிரி நான் வாய்ப்பு தேடவில்லை.
காவல்துறையில் பணி கிடைத்தால் ஏற்பீர்களா?
கிடைத்தால் பார்க்கலாம்.
திரைத்துறையில் பெண்களுக்கு சுதந்திரம் எந்தளவு இருக்கிறது?
கண்டிப்பாக இல்லை என்று தான் சொல்வேன். வாய்ப்பு கொடுத்தால் தானே, சுதந்திரம் பற்றி பேச முடியும். இங்கு வாய்ப்புக்கே முன்னுரிமை தரப்படுவதில்லை.
எதிர்கால திட்டம்?
நல்ல படங்களில் நடித்து விட்டு, குடும்பத்தோடு, ‘செட்டில்’ ஆக வேண்டும். இல்லாதவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். இதை விளம்பரத்திற்காக சொல்லவில்லை.
உங்கள் திருமணம் காதல் திருமணமா… பெற்றோர் நிச்சயிக்கும் திருமணமாக இருக்குமா?
கண்டிப்பாக பெற்றோர் நிச்சயிக்கும் திருமணம் தான். இப்போது, 99 சதவீதம், காதல் பொய்யாகவே இருக்கிறது. 1 சதவீதம் மட்டுமே உண்மையாக இருக்கிறது. அந்த, 1 சதவீதத்தை தேடி நம் நேரத்தை வீணடிக்க வேண்டாமே.

