தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா, 3 டெஸ்ட், 6 ஒரு நாள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த விராட் படை, ஒரு நாள் தொடரின் முதல் 4 போட்டிகளில் மூன்றை வென்று 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 4 வது ஒருநாள் போட்டி போர்ட் எலிசபெத் மைதானத்தில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்காவின் கேப்டன் மார்க்ரம் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களுடன் இந்தியா களமிறங்கியது.
துவக்க ஆட்டகாரர்களாக தவான் மற்றும் ரோஹித் ஷர்மா களமிறங்கினர். தவான் துவக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். அவர், 23 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து களமிறங்கிய கேப்டன் கோலி 36 ரன்களில் ரன் அவுட் ஆனார். ரஹானேவும் 8 ரன்களில் ரன் அவுட் ஆக மறுமுனையில் ரோகித் ஷர்மா நிலையாக நின்று விளையாடி சதமடித்தார். இது அவருக்கு 17 -வது ஒருநாள் சதமாகும். இந்திய அணி தற்போது 41 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்துள்ளது.
போர்ட் எலிசபெத் மைதானத்தைப் பொறுத்தவரை இந்தியா இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலுமே தோல்வியையே சந்தித்திருக்கிறது. அதேபோல், இந்த மைதானத்தில் முதல்முறையாக 200 ரன்களை இந்தியா கடந்துள்ளது.