டெல்லி டேர்டெவில்ஸ் அணியை 4 ரன்வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வென்றது. பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற டேர்டெவில்ஸ் அணி முதலில் பந்துவீசியது. பஞ்சாப் அணியில் கிறிஸ் கேலுக்கு ஓய்வளிக்கப்பட்டது. தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், ஆரோன் பிஞ்ச் களமிறங்கினர். பிஞ்ச் 2 ரன் மட்டுமே எடுத்து ஆவேஷ் கான் பந்துவீச்சில் ஷ்ரேயாஸ் வசம் பிடிபட்டார்.ராகுல் 23 ரன் (15 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), அகர்வால் 21 ரன் எடுத்து (16 பந்து, 3 பவுண்டரி) பிளங்க்கெட் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினர். யுவராஜ் 17 பந்தில் 14 ரன், கருண் நாயர் 34 ரன் (32 பந்து, 4 பவுண்டரி), டேவிட் மில்லர் 26 ரன் (19 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் அஷ்வின் 6 ரன், டை 3 ரன் எடுத்து டிரென்ட் போல்ட் வீசிய கடைசி ஓவரில் ஆட்டமிழந்தனர். பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன் குவித்தது. பரிந்தர் ஸ்ரண் (0) ஆட்டமிழக்காமல் இருந்தார். டேர்டெவில்ஸ் பந்துவீச்சில் அறிமுக போட்டியிலேயே அபாரமாகப் பந்துவீசிய பிளங்க்கெட் 4 ஓவரில் 17 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். ஆவேஷ் கான், போல்ட் தலா 2, கிறிஸ்டியன் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 144 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி டேர்டெவில்ஸ் களமிறங்கியது. கேப்டன் காம்பீர் 4, மேக்ஸ்வெல் 12, ரிஷிபண்ட் 4, கிறிஸ்டியன் 6 ரன்னில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். தொடக்க வீரர் பிரித்திவி ஷா 22 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். ஷ்ரேயாஸ் ஐயர், திவேட்டியா வெற்றிக்காக போராடினர். திவேட்டியா 24 ரன் எடுத்து அவுட் ஆனார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன் தேவைப்பட்டது. முஜிப் உர் ரகுமான் வீசிய அந்த ஓவரில் முதல் 5 பந்தில் 0,6,0,2,4 ஐயர் எடுத்தார். கடைசி பந்தில் வெற்றிக்கு 5 ரன் தேவைப்பட்ட நிலையில் ஐயர் ஆட்டம் இழந்தார். இதனால் 4 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் 10 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பெற்றது. கடைசி வரை வெற்றிக்கு போராடிய ஐயர் 45 பந்தில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 57 ரன் எடுத்தார். பஞ்சாப் தரப்பில் ராஜ்புத், டை, முஜிப் உர் ரகுமான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.