ரஜினிகாந்த் படம் என்றாலே இன்றைய இளம் தலைமுறைக்கும் உடனே ஞாபகத்திற்கு வரும் படம் ‘பாட்ஷா’ மட்டுமாகத்தான் இருக்கும். அந்தப் படத்திற்கு முன்பாகவும், பின்னரும் எத்தனையோ படங்களில் ரஜினிகாந்த் நடித்துவிட்டார். ஆனால், ஒரு ரஜினி படம் என்றால் எப்படி இருக்க வேண்டுமோ, அந்த அம்சங்கள் அத்தனையும் ஒருசேர அமைந்த ஒரே படம் என்றால் அது ‘பாட்ஷா’ தான்.
இத்தனைக்கும் ‘ஹம்’ ஹிந்திப் படத்தின் ரீமேக்தான் ‘பாட்ஷா’ படம். ஆனாலும், தமிழில் ரஜினிக்காகவே உருவாக்கப்பட்ட கதை, கதாபாத்திரம் போன்றுதான் அந்தப் படம் இருக்கும்.
1995ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி வெளிவந்த ‘பாட்ஷா’ படம் இன்று 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், தேவா இசையில், ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன், ஆனந்தராஜ், சரண்ராஜ், ஜனகராஜ், கிட்டி, சசிகுமார், செண்பகா, யுவராணி, சத்யப்ரியா, விஜயகுமார், தேவன் என பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தாலும் ஒவ்வொருடைய கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் இருந்தது.
ரஜினியுடன் கூடவே இருக்கும் தளபதி தினேஷ், மகாநதி சங்கர், அந்த சிங் என அவர்கள் கூட ரசிகர்களால் கவனிக்கப்பட்டார்கள். ‘பேட்ட’ வரை ரஜினிகாந்த் வந்துவிட்டாலும் ‘பாட்ஷா’வை மிஞ்சும் அளவிற்கு வேறொரு படத்தை எந்த ஒரு இயக்குனராலும், ரஜினிகாந்த்தை வைத்து கொடுக்க முடியவில்லை என்பது வருத்தமான விஷயம்.
ரஜினி ரசிகர்களைக் கேட்டால் ‘பாட்ஷா’ என்றால் அது ஒரே ‘பாட்ஷா’தான். அதற்கு ஈடு இணை வேறு எதுவுமில்லை என்று சொல்வார்கள். ஒரு ஹீரோயிசம் படத்தை எப்படி உருவாக்க வேண்டும் என்பதற்கு காலத்திற்குமான ஒரு சிறந்த ‘பாடம்’ தான் ‘பாட்ஷா’ படம்.