2010ல் வெளியான ‘களவாணி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஓவியா. அதன் பிறகு வருடத்திற்கு ஓரிரு படங்களில் நடித்து வந்தார். இருந்தாலும் ஒரு சில படங்களைத் தவிர மற்ற படங்கள் அவருக்கு பெரிய பெயரைப் பெற்றுத் தரவில்லை.
2017ம் ஆண்டில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ சீசன் 1 நிகழ்ச்சி மூலம் மக்களிடத்தில் மிகவும் பிரபலமானார். அந்த புகழைப் பயன்படுத்தி அவரால் பெரிய வாய்ப்புகளைப் பெற முடியவில்லை. அதனால், கடந்த 2018லும் அவரால் ஒரு தமிழ்ப் படத்திலும் நாயகியாக நடிக்க முடியவில்லை.
இருப்பினும் ‘பிக் பாஸ்’ புகழை வைத்து அவரை தன் ‘காஞ்சனா 3′ படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக நடிக்க வைத்தார் ராகவா லாரன்ஸ். அந்தப் படம் வெளிவருவதற்கு முன்பாகவே ஓவியா முதன்மைக் கதாநாயகியாக நடித்த ’90 எம்எல்’ படம் வெளிவந்தது. ஓவியாவுக்கு ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கிடைத்த நல்ல இமேஜை அந்த ஒரே ஒரு படம் உடைத்தெறிந்தது.
பின்னர் வந்த ‘சீனி, களவாணி 2′ ஆகிய படங்களும் ஓவியாவுக்குக் கை கொடுக்கவில்லை. இருப்பினும் இந்த ஆண்டில், ஓவியா நடித்து ’90 எம்எல், கணேசா மீண்டும் சந்திப்போம், காஞ்சனா 3, சீனி, களவாணி 2’ ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன.

