ஸ்மித் – கோலி வார்த்தைப் போர், ஸ்மித் – ரூட் வாய்க்கா தகராறு, புனே பிட்ச் பிரச்னை, டெல்லி மாசுப் பிரச்னை, அஷ்வின் – ஜடேஜா விக்கெட் வேட்டை, கேப்டன்களின் சத வேட்டை, வங்கதேசத்தின் எழுச்சி என டெஸ்ட் கிரிக்கெட், இந்த ஆண்டு கமர்ஷியல் படம்போல கலந்துகட்டி அடித்தது. டெஸ்ட் கிரிக்கெட்டை மேம்படுத்த, நான்கு நாள் போட்டிகளையும் அறிமுகப்படுத்திவிட்டது ஐ.சி.சி. 2017-ம் ஆண்டில் இதுவரை 45 போட்டிகள் (டிசம்பர் 25 வரை) நடந்துள்ளன. பல வீரர்கள் இந்த வருடம் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களுள், இந்த ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியில் இடம் பிடிக்கக்கூடியவர்கள் யார் யார்? ஒரு பார்வை…
பி.கு: இது, டிசம்பர் 26 தொடங்கிய `பாக்ஸிங் டே’ ஆஷஸ் போட்டிக்கு முந்தைய போட்டிகளின் அடிப்படையிலான அலசல்.
டீன் எல்கர்
மார்க்ரம், கூன், ஸ்டீஃபன் குக் என தொடருக்குத் தொடர் ஓப்பனர்களை மாற்றிக்கொண்டே இருந்தது தென்னாப்பிரிக்க அணி. சரியான ஓப்பனர் இல்லாத பிரச்னையை தனி ஆளாகச் சமாளித்து, ஜொலிக்கவும் செய்தார் டீன் எல்கர். இந்த ஆண்டு ஆடிய எந்தத் தொடரிலும் இவர் சதமடிக்கத் தவறவில்லை. 11 போட்டிகளில் 1,097 ரன் எடுத்து அசத்திய எல்கர், வங்கதேசத்துடனான போட்டியில் ஒரு ரன்னில், தன் முதல் இரட்டைச் சதத்தைத் தவறவிட்டார். இந்த வருடம் ஆடிய நான்கு தொடர்களில், இரண்டில் இவர்தான் தொடர் நாயகன். வார்னரின் சராசரியைவிட (44.89) எல்கரின் சராசரி அதிகம். எனவே, எல்கர்தான் ஓப்பனிங்குக்கான சாய்ஸ்.
கே.எல்.ராகுல்
இந்த ஆண்டு வார்னர் 808 ரன் எடுத்துள்ளார். விஜய், தவான் இருவரின் சராசரியும் ஐம்பதைத் தாண்டுகிறது. ஆனால், இந்த லெவனுக்குத் தேர்வுசெய்யப்படுவது கே.எல்.ராகுல்! சராசரி தவான், விஜய் இருவரைவிடவும் குறைவு. அப்படியிருக்கையில் ஏன் ராகுல்? விளையாடிய ஒன்பது போட்டிகளில் (14 இன்னிங்ஸ்) 9 அரைசதம் அடித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான புனே டெஸ்ட், இலங்கைக்கு எதிரான கொல்கத்தா டெஸ்ட் என இந்திய அணி தடுமாறிய போட்டிகளில் தன்னை நிரூபித்துள்ளார். எந்த மாதிரியான ஆடுகளத்திலும் இவரிடமிருந்து 50+ ஸ்கோர் நிச்சயம். அந்த கன்சிஸ்டன்சிதான் ராகுலைத் தேர்ந்தெடுத்ததன் காரணம். அதுமட்டுமின்றி, தவான், விஜய் இருவரும் முறையே 5 மற்றும் 6 போட்டிகளில்தான் விளையாடியுள்ளனர். முக்கியமான இந்தியத் தொடரில் வார்னர் கோட்டைவிட்டுவிட்டார்.
சடேஷ்வர் புஜாரா
“டிராவிட் இருந்திருந்தா…” இந்த வார்த்தைகள் இதுவரை எழாததே புஜாரேவின் மிகப்பெரிய வெற்றி. அந்த ஜாம்பவானின் இடத்துக்கு தானே சரியானவர் என்பதை நிரூபித்துவிட்டார். அணி சரிந்தபோதெல்லாம் தனி ஆளாகப் போராடி மீட்டெடுத்தார். மறுமுனையில் இவர் நிற்பதுவே, கோலி உள்ளிட்ட மற்ற பேட்ஸ்மேன்கள் நெருக்கடி இல்லாமல் ஆட உதவுகிறது. அதிலும் இந்த ஆண்டு 1,140 ரன் எடுத்து பட்டையைக் கிளப்பியிருக்கிறார். ராஞ்சி டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 11 மணி நேரம் களத்தில் நின்று இரட்டைச்சதம் அடித்ததெல்லாம் வேற லெவல். இலங்கைக்கு எதிரான கொல்கத்தா டெஸ்டில் ஐந்து நாள்களும் பேட்டிங் செய்து, அரியதொரு சாதனையையும் நிகழ்த்திவிட்டார் `குட்டித் தூண்’.
விராட் கோலி
10 போட்டிகளில் 5 சதங்கள்… அவற்றுள் 3 இரட்டைச் சதங்கள். மூன்று முறை ஆட்ட நாயகன். ஒருமுறை தொடர்நாயகன். கேப்டனாக 10 போட்டிகளில் 6 வெற்றி, 3 டிரா, 1 தோல்வி. மூன்று தொடர்களிலும் வெற்றி. டெஸ்ட் ரேட்டிங்கில் இந்தியா நம்பர் 1. இதற்கு மேலும் நிரூபிக்க என்ன இருக்கிறது? டெஸ்ட் போட்டிகளிலும் தான் ராஜா என்பதை, இந்த வருடம் உரக்கச் சொல்லியிருக்கிறார் கிங் கோலி. ஆஸ்திரேலிய தொடர் மட்டும் பேட்ஸ்மேன் கோலிக்குச் சறுக்கல். ஆனால், அதன் பிறகு கோலியின் விஸ்வரூபம் வேற மாதிரி இருந்தது. கொல்கத்தா டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் வேகமாக ரன் குவித்து, ஃபீல்டிங் வியூகங்களால் இலங்கைக்கு நெருக்கடி கொடுத்து, தோல்வியின் விளிம்பிலிருந்த அணியை வெற்றியின் கடைசிப் படி வரை அழைத்துச் சென்றார். அவரது கேப்டன்சியும் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த ஆண்டின் சிறந்த லெவனுக்கு கேப்டன் கோலிதான்.
ஸ்டீவ் ஸ்மித்
கோலிக்குக் கொஞ்சமும் சளைக்காமல், சொல்லப்போனால் அவரைவிட ஒரு கியர் அதிகமான வேகத்தில் பயணிக்கிறார் ஸ்டீவ் ஸ்மித். பாக்ஸிங் டே டெஸ்டில் இந்த ஆண்டின் டாப் ஸ்கோரராகிவிட்டார். ஒவ்வோர் இரண்டு போட்டிக்கும், ஒரு சதம் என்ற வகையில் அடித்து நொறுக்குகிறார். இந்தியாவுடனான தொடரில், மூன்று சதங்கள் அடித்து தனி ஆளாகப் போராடினார். ஆஷஸ் தொடரிலும் இவரைச் சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து பௌலர்கள் திணறிக்கொண்டிருக்கின்றனர். 59 போட்டிகளில் 22 சதங்கள் அடித்து, சச்சினின் சாதனைகளுக்குச் சவால் விட்டுக்கொண்டிருக்கிறார். கேப்டனாக, ஆசியக் கண்டத்தில் தோற்றவர், ஆஷஸை மீட்டுக் கொடுத்து, ஆண்டை சிறப்பாக முடித்திருக்கிறார்.
முஷ்ஃபிகுர் ரஹிம்
அணியின் விக்கெட் கீப்பர் இடத்துக்கு, வங்கதேச `முன்னாள்’ கேப்டன் ரஹிம். ஒரு பேட்ஸ்மேனாகவும் இந்த ஆண்டு அவரது செயல்பாடு சூப்பர். இந்த ஆண்டு எட்டு போட்டிகளில் விளையாடிய அவர், ஒரேயொரு முறைதான் ஒற்றை இலக்கத்தில் வெளியேறியுள்ளார். நியூஸிலாந்து, இந்தியா அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்த போட்டிகளில் சதம் அடித்த அவர், 3 அரைசதங்களும் அடித்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை டிரா செய்தது, அவரது கேப்டன்சியின் மிகப்பெரிய மைல்கல். 12 கேட்சுகளும், 2 ஸ்டம்பிங்குகளும் செய்துள்ளார். மற்ற கீப்பர்களான பிராத்வெயிட், டி காக், டித்திமான் சஹா ஆகியோர் பேட்டிங்கில் சுமாராகவே செயல்பட்டுள்ளதால், ரஹிம்தான் நமது சாய்ஸ்