2017 – இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகச்சிறந்த ஆண்டாக அமைந்தது (#Rewind2017). கோலி தலைமையிலான இந்திய அணி, தொடர்ந்து ஒன்பது டெஸ்ட் தொடர்களில் வெற்றி; அவற்றில் நான்கு இந்த வருடம். இரு நாடுகளுக்கிடையேயான ஒரு நாள் போட்டித் தொடரில் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இலங்கை, மேற்கு இந்தியத் தீவுகள் அனைத்து அணிகளையும் வீழ்த்தியுள்ளது. அணியில் இடம்பெற்ற அனைத்து வீரர்களும் வெற்றிக்குப் பங்காற்றினர். அணியில் புதிதாகச் சேர்க்கப்பட்ட வீரர்களும் சர்வதேச அரங்கில் தங்களை நிரூபித்துள்ளனர். இந்த வெற்றிப் பயணத்தில், தமிழக கிரிக்கெட்டின் பங்களிப்பும் அளவிட முடியாதது.
ஸ்ரீகாந்த், வெங்கடராகவன், பாலாஜி, பதானி, முரளி கார்த்திக், ரமேஷ், சந்திரசேகர் என தமிழக கிரிக்கெட், இந்திய அணிக்கு சிறந்த வீரர்களை வழங்கியுள்ளது. அந்த வரிசையில் இந்த வருடம் மட்டும் இந்திய கிரிக்கெட் அணியில் ஆறு தமிழக வீரர்கள் இடம்பெற்று அசத்தியுள்ளனர். சர்வதேச அளவில் முரளி விஜய்யின் திடமான ஆட்டம், அஸ்வினின் மாயச்சுழல், ஒரு நாள் அணியில் தினேஷ் கார்த்திக்கின் கம்பேக், அபினவ் முகுந்த்துக்கான வாய்ப்பு, விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர் போன்ற புதிய இளம் ஆல்ரவுண்டர்களின் வருகை என தமிழக வீரர்கள் இந்திய கிரிக்கெட் அணியில் முக்கிய அங்கம் வகிக்கின்றனர். அந்த ஆறு வீரர்கள் பற்றிய சிறிய தொகுப்பு…
முரளி விஜய்:
டெஸ்ட் போட்டிகளில் சேவாக் – கம்பீர் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக ஜொலித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில், இந்திய அணியினுள் அடியெடுத்து வைத்த தமிழக வீரர் முரளி விஜய், இப்போது இந்திய அணியின் முதல் சாய்ஸ் ஓப்பனர். எந்த நாட்டிலும் எந்த மைதானத்திலும் நிலைத்து நின்று ஆடக்கூடிய விஜய், இந்த ஆண்டு காயங்களால் பாதிக்கப்பட்டார். அதனால் ஆறு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடினார். ஆனாலும், 520 ரன் எடுத்தார். 3 சதம், 1 அரைச்சதம். இலங்கைக்கு எதிரான தொடரில் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் சதம் அடித்து அசத்தினார். இவர் சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொள்ளச் சென்றதால், இவர் இல்லாத தமிழக அணி, லீக் சுற்றையே தாண்டவில்லை.
ரவிச்சந்திரன் அஷ்வின்:
சர்வேதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 300 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். உலகின் நம்பர் 4 டெஸ்ட் பெளலரும், நம்பர் 4 டெஸ்ட் ஆல்ரவுண்டரும் இவரே. 2011-ம் ஆண்டிலிருந்து இந்திய டெஸ்ட் அணியின் நீக்க முடியா ஓர் அங்கமாக மாறியுள்ளார். 2017-ம் ஆண்டில் 11 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய அஷ்வின், 56 விக்கெட்டுகள் வீழ்த்தி, இந்த ஆண்டு அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 3-வது இடத்தைப் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 21 விக்கெட்டுகள் வீழ்த்தி, இந்திய அணி அந்தத் தொடரை வெல்ல உதவினார். ஒன்பது ஒரு நாள் போட்டிகளில், எட்டு விக்கெட்டுகள் எடுத்தார் அஷ்வின். காயம் காரணமாக ஐ.பி.எல் தொடரில் ஆடவில்லை.
அபினவ் முகுந்த்:
தொடக்க ஆட்டக்காரரான அபினவ் முகுந்த், 21 வயதில் (2011) முதன்முதலாக இந்திய அணியில் இடம்பிடித்தார். பெரிய அளவில் சாதிக்காமல்போக, தனது இடத்தைத் தக்கவைத்துக்கொள்ளத் தவறிவிட்டார். ஆனால், முதல் தரப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்திக்கொண்டே இருந்தார். விளைவு, ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் அணியில் இடம் கிடைத்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் கொஞ்சம் தடுமாறினாலும், இலங்கைக்கு எதிரான அடுத்த போட்டியில் 81 ரன் எடுத்து தன் திறமையை நிரூபித்தார். சக தமிழக வீரர் விஜய், ராகுல், தவான் ஆகியோரால் போட்டி அதிகம் என்றாலும், அவர்களுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் திறமை வாய்ந்த இடக்கை ஆட்டக்காரரான இவருக்கு, இந்திய அணியின் கதவு மீண்டும் திறக்கலாம். தமிழக ரஞ்சி அணியின் கேப்டன் இவரே!
தினேஷ் கார்த்திக்:
தமிழக கிரிக்கெட், இந்தியாவுக்கு அளித்த தரமான விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக். 2004-ம் ஆண்டில் இந்திய அணிக்குள் அறிமுகமானார் இவர். அதன் பிறகு தோனியின் ஆதிக்கத்தால் சற்று மறைந்தே இருந்தார். இருப்பினும் இந்திய அணியின் 2007 டி-20 உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி வெற்றிகளில் உறுதுணையாக இருந்தார். 2007-ம் ஆண்டு உலகக்கோப்பை அணியிலும் இடம்பிடித்தார். ஆனால், தேசிய அணியில் கிடைத்த இடத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. சர்வேதச அளவில் சற்று தொய்வு ஏற்பட்டாலும், ரஞ்சி, ஐ.பி.எல்., தியோதர் கோப்பை, விஜய் ஹசாரே டிராபி அனைத்திலும் சிறப்பாக ஆடினார். இந்திய அணியின் மிடில் ஆர்டருக்கு அனுபவம் தேவை என்பதால், இவருக்கு கம்பேக் கொடுத்தது அணி நிர்வாகம். இரண்டு அரைச்சதங்கள் அடித்துள்ளார். தொடர்ந்து கன்சிஸ்டென்டாக ஆடினால், அணியில் தொடர்ந்து நீடிக்க முடியும்.
விஜய் சங்கர்:
தமிழக `லிமிடெட் ஓவர்ஸ்’ அணியின் கேப்டன் விஜய் சங்கர், இந்திய அணியின் சர்ப்ரைஸ் தேர்வு! இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து திருமணம் காரணமாக புவனேஷ்வர் குமார் விலகிக்கொள்ள, அவருக்கு மாற்றாக அணிக்குத் தேர்வானார் விஜய் சங்கர். ஆனால், பிளேயிங் லெவனில்தான் இடம் கிடைக்கவில்லை. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான இவர், பகுதி நேர மிதவேகப்பந்து வீச்சாளரும்கூட. 2017 ஐ.பி.எல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக சிறப்பான பங்களிப்பைத் தந்தார். யுவ்ராஜ் சிங் காயமடைந்தபோது, அவருக்குப் பதிலாகக் களமிறங்கி அரைச்சதம் அடித்து அசத்தினார்.
வாஷிங்டன் சுந்தர்:
2016-ம் ஆண்டில் நடந்த 19 வயதுக்குட்பட்டோர் உலகக்கோப்பையில் இந்திய அணியில் இடம்பெற்று விளையாடிய சுந்தர், அதன் பிறகு டாப் கியரில் பயணிக்கிறார். காயத்தால் ஐ.பி.எல் தொடரிலிருந்து அஷ்வின் விலகிவிட, அந்த வாய்ப்பை கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். எட்டு விக்கெட்டுகள் வீழ்த்தியதோடு, மிகவும் சிக்கனமாக (எகானமி – 6.16) பந்துவீசி அசத்தினார். பிளே-ஆஃப் போட்டியில் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தியது அவரது பெஸ்ட்! அடுத்த நடந்த டி.என்.பி.எல் தொடரில் வாஷிங்டன் ஆடியது தாண்டவம்! ஒன்பது போட்டிகளில் 459 ரன், 15 விக்கெட்டுகள் எடுத்து மிரட்டினார். தொடரின் நாயகனும் இவரே. இந்த இரு தொடர்களின் செயல்பாடு, அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு தந்தது. இந்திய அணிக்காக மிக இளம் வயதில் டி-20 போட்டியில் விளையாடியவர் இவரே. அந்தப் போட்டியிலும் பந்தை சிக்கனமாக வீசி, நான்கு ஓவர்களில் 22 ரன் மட்டும் கொடுத்து, 1 விக்கெட்டை வீழ்த்தினார். இந்திய அணியில் விரைவில் நிரந்தர இடம் பிடிக்கக்கூடும்.