ஐ.சி.சி., 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை (50 ஓவர்) தொடர் நடத்தப்படுகிறது. இதன் 12வது தொடர் அடுத்த ஆண்டு நியூசிலாந்தில் (ஜன. 13–பிப். 3) நடக்கவுள்ளது. கிறைஸ்ட்சர்ச், குயின்ஸ்டவுண் உள்ளிட்ட 4 மைதானங்களில் போட்டிகள் நடக்கும்.
16 அணிகள் பங்கேற்பு:
இதற்கான, அட்டவணையை ஐ.சி.சி., அறிவித்துள்ளது. இதில், இந்தியா, ஆஸ்திரேலியா, ‘நடப்பு சாம்பியன்’ வெஸ்ட் இண்டீஸ் என மொத்தம் 16 அணிகள் தலா 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. இந்தியா, ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே, பப்புவா நியூ கினியா அணிகள் ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ளன. ‘ஏ’ பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, கென்யா அணிகள் இடம்பெற்றுள்ளன.
இந்தியா– ஆஸி., மோதல்:
முதல் போட்டியில் பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே–பப்புவா நியூ கினியா அணிகள் மோதுகின்றன. இதே நாளில், வங்கதேசம்– நமீபியா, நியூசிலாந்து– வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்திய அணி தனது முதல் போட்டியில் (ஜன. 14) ஆஸ்திரேலியாவை எதிர் கொள்கிறது. பின், பப்புவா நியூ கினியா (ஜன. 16), ஜிம்பாப்வே (ஜன. 19) அணிகளுடன் மோதுகிறது. பைனல் பிப்ரவரி 3ல் நடக்கவுள்ளது. கடந்த முறை (2016) பைனலில் இந்திய அணி வெஸ்ட் இண்டீசிடம் வீழ்ந்தது. இதனால், இம்முறை இந்தியா மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.