தமிழ், தெலுங்குத் திரையுலகத்தில் சில வருடங்கள் முன்பு வரை டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருந்தவர் த்ரிஷா. இடையில் சில தொய்விற்குப் பிறகு மீண்டும டாப் வரிசையைப் பிடித்துவிட்டார். அதற்குக் காரணமாக இருந்தது கடந்த வருடம் வெளிவந்த ’96’.
2002ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி த்ரிஷா நாயகியாக நடித்த ‘மௌனம் பேசியதே’ படம் வெளிவந்தது. அதன் பிறகு வெளிவந்த ‘சாமி’, அதற்கடுத்த வருடம் வெளிவந்த ‘கில்லி’ ஆகிய படங்கள் த்ரிஷாவை முன்னணி ஹீரோயினாக மாற்றின. தெலுங்கில் வெளிவந்த ‘வர்ஷம்’ படம் பெரிய வெற்றியைப் பெற்றதால் அங்கும் முன்னணி ஹீரோயின் ஆனார்.
2019ம் வருடத்தில் அவர் நடித்த ஒரே படமான ‘பேட்ட’ வெளியானது. ரஜினிகாந்த் ஜோடியாக முதல் முறையாக நடித்தார் த்ரிஷா. ஒரே படமாக இருந்தாலும் இந்தப் படம் த்ரிஷாவுக்கு முக்கிய படமாக அமைந்தது. அவர் நடிக்க வந்து 18வது வருடம் ஆன நிலையிலும் இன்னும் முன்னணியில்தான் உள்ளார். “கர்ஜனை, சதுரங்க வேட்டை 2, பரமபத விளையாட்டு, ராங்கி” ஆகிய படங்கள் அவர் கைவசம் உள்ளன.
மேலும் மணிரத்னம் உருவாக்கி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 2020ம் ஆண்டிலும் த்ரிஷாவின் பயணம் தொடரும்.

