தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் ஷிகர் தவான் சதம் அடித்ததன் மூலம் தனது 100-வது போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றார். சர்வதேச அளவில் 9-வது வீரராகவும் பட்டியலில் அவர் இடம் பெற்றார்.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் போட்டி ஜோகன்ஸ்பர்க் நகரில் நேற்று நடந்தது. இந்தப் போட்டி இந்திய வீரர் ஷிகார் தவானுக்கு 100-வது ஒருநாள் போட்டியாகும். இந்த போட்டியில் அபாரமாக ஆடிய தவான் 109 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் 100-வது போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் எனும் பெருமையை தவான் பெற்றார். இதற்கு முன் 1999-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக சவுரவ் கங்குலி தனது 100-வது போட்டியில் 97 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதை தவான் முறியடித்துள்ளார். அது மட்டுமல்லாமல், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக ஷிகார் தவான் அடிக்கும் 3-வது சதமாகும்.
அதுமட்டுமல்லாமல் கடந்த 17 ஆண்டுகளில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக அந்நாட்டு மண்ணில் தொடக்க வீரராக களம் இறங்கி சதம் அடித்த முதல் இந்தியர் தவான் ஆவார். இதற்கு முன் கடந்த 2001-ம் ஆண்டில் கங்குலி மற்றும்சச்சின் டெண்டுல்கர் சதம் அடித்துள்ளனர்.
100 போட்டிகளில் விளையாடியுள்ள தவான் இதுவரை 13 சதங்களுடன் 4,309 ரன்கள் சேர்த்துள்ளார். இவரின் சராசரி 46.33 ஆகும். 100-வது போட்டி வரை அதிக சதம் அடித்தவர்களில் ஹசிம் அம்லா 16 சதங்களுடனும், டேவிட் வார்னர் 14 சதங்களுடன் முன்னணியில் உள்ளனர்.
ஷிகார் தவான் தனது 50-வது ஒருநாள் போட்டிகள் வரை 6 சதங்கள், 11 அரை சதங்கள் அடித்து 2,048 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் சராசரி 44.52 ரன்களாகும். ஆனால், அதைக் காட்டிலும் 51 முதல் 100 போட்டிகளில் தனது திறமையை தவான் இன்னும் மெருகேற்றியுள்ளார். 51 முதல் 100 போட்டிகளில் 2,261 ரன்களும், 7 சதங்களும், 14 அரை சதங்களும் அடித்துள்ளார். இதன் சராசரி 48.10 ரன்களாகும்.
100 போட்டிகள் வரை அதிக ரன்
முதல் 100 ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் கடந்தவர்கள் பட்டியிலில் தென் ஆப்பிரிக்க வீரர் ஹசிம் அம்லா 4,808 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
2வதாக தவான் (4,309), 3-வது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் (4,217), மேற்கிந்தியதீவுகள் வீரர் கிரீனிட்ஜ் (4,177), இங்கிலாந்து வீரர் ஜோய் ரூட் (4,4,164), வி.வி.ரிச்சர்ட்ஸ் (4,146), விராட் கோலி (4,107). ரன்கள் சேர்த்து இருந்தனர்.
100-வது போட்டியில் சதம் அடித்தவர்கள்
100-வது போட்டியில் இதுவரை தவானுடன் சேர்த்து 9 வீரர்கள் சதம் அடித்துள்ளனர். அவர்களில் மேற்கிந்தியதீவுகள் வீரர் கிரீனிட்ஜ்(102*நாட்அவுட்), நியூசிலாந்து வீரர் கிறிஸ் கெயின்ஸ் (115), பாகிஸ்தான் வீரர் முகம்மது யூசுப் (129), இலங்கை வீரர் சங்கக்கரா (101), மேற்கிந்தியத்தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் (132*), இங்கிலாந்து வீரர் மார்க் டெரஸ்கோத்திக் (100*), மேற்கிந்தியத்தீவுகள் வீரர் சர்வான் (115*), ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் (124), தவான் (109).