உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஆடவர் பிரிவு 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இங்கிலாந்து வீரர் மோ பாரா, 3-வது முறையாக தங்கப் பதக்கம் வென்றார்.
லண்டனில் நேற்று முன்தினம் தொடங்கிய இந்த போட்டியில் ஆடவர் பிரிவு 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இங்கிலாந்தின் மோ பாரா பந்தய தூரத்தை 26 நிமிடங்கள் 49.51 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் அதிவேகமாக இலக்கை அடைந்த 2-வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் 34 வயதான மோ பாரா. உலக தடகள சாம்பியன்ஷிப்பில் அவர், இந்தப் பிரிவில் தங்கம் வெல்வது இது 3-வது முறையாகும். கடந்த 2013 மற்றும் 2015-ம் ஆண்டு தொடரிலும் தங்கம் வென்றிருந்தார் மோ பாரா.
உகாண்டாவின் ஜோஸ்வா செப்டிஜி, பந்தய தூரத்தை 26:49.94 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கத்தையும், கென்யாவின் பால் தனுயி பந்தய தூரத்தை 26:50.60 விநாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர். பால் தனுயி இந்தத் தொடரில் வெண்கலப் பதக்கம் கைப்பற்றுவது இது 3-வது முறையாகும்.