நடிகைகள் கங்கனா ரணவத், டாப்சி ஆகியோருக்கு இடையே நடக்கும் சண்டைதான் பாலிவுட்டில் தற்போது இருக்கும் ஒரு முக்கியமான பரபரப்பு. டாப்சி அவருடைய பிறந்தநாளை இரண்டு தினங்களுக்கு முன்பு ஆகஸ்ட் 1ம் திகதியன்று கொண்டாடினார். ஆனால், அன்றைய தினம் எந்த வாழ்த்தையும் சொல்லாமல் நேற்று நண்பகலில் திடீரென டாப்சிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி இருக்கிறார் ஹிருத்திக் ரோஷன்.
டாப்சி பிறந்த நாளுக்கு ஹிருத்திக் வாழ்த்து சொல்லியிருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை.
“ஒரு ரசிகனாக கூறுகிறேன், இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் டாப்சி. சூப்பர் டூப்பரான வருடமாக அமைய வாழ்த்துகள்” என்று ஹிருத்திக் வாழ்த்தியதற்கு, “இந்த ஒரு மெசேஜால் நான் முற்றிலும் வாயடைத்து போய்விட்டேன். இதற்கு எப்படி சரியாக பதிலளிக்க வேண்டும் என்று கூடத் தெரியவில்லை. இருப்பினும் இது என்னுடைய முந்தைய பிறந்தநாள் பரிசாக மாறும். உங்களை நான் எவ்வளவு மதிக்கிறேன் என்பது தெரியும், நீங்கள் மீண்டும் வலியுறுத்தத் தேவையில்லை,” என அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார் டாப்சி.
தற்போது கங்கனா ரணவத்தை டாப்சி தீவிரமாக எதிர்த்து வரும் நிலையில் ஹிருத்திக்கின் இந்த திடீர் வாழ்த்தை பாலிவுட்டினர் வித்தியாசமாகப் பார்க்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு ஹிருத்திக், கங்கனா இடையே நடந்த மோதல் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அதற்காகவே கங்கனாவை வெறுப்பேற்றும் விதத்தில் டாப்சிக்கு ஹிருத்திக் வாழ்த்து தெரிவித்திருக்கலாம் என்கிறார்கள்.