தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் ஹிந்திப் படங்களுக்கும், ஹிந்திப் பாடல்களுக்கும் பெரும் வரவேற்பு இருந்தது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரின் வரவு ஹிந்திப் படங்களுக்கும், இளையராஜாவின் வருகை ஹிந்திப் பாடல்களுக்கும் ஒரு முடிவைக் கொடுத்தது.
இப்போது தமிழ்நாட்டில் மீண்டும் ஹிந்திப் படங்களின் வருகை அதிகமாகிவிட்டது. இருந்தாலும் அவற்றை ஹிந்திப் படங்களாக மட்டும் வெளியிடாமல் தமிழில் டப்பிங் செய்து ரசிகர்களைக் கவர முயற்சி செய்கிறார்கள். அந்த வரிசையில் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான், சோனாக்ஷி சின்கா மற்றும் பலர் நடித்துள்ள ‘தபங் 3’ படத்தை தமிழிலும் டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள்.
வரும் டிசம்பர் 20ம் தேதி வெளியாக உள்ள ‘தபங் 3’ டப்பிங் படத்திற்கு நேரடி தமிழ்ப் படங்களான ‘தம்பி, ஹீரோ’ ஆகிய படங்களுக்குப் போட்டியாக பல தியேட்டர்கள் கிடைத்துள்ளன. பிரபல தயாரிப்பாளர்களைப் பிடித்து அவர்கள் மூலம் படத்தை அதிக தியேட்டர்களில் வெளியிடும் வழியை அவர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். ‘தபங் 3’ படத்தை வெளியிடும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம்தான் ‘ஹீரோ’ படத்தையும் தயாரித்துள்ளது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

