வேர்ல்டு ரெஸ்லிங் என்டர்டெயின்மென்ட் சுருக்கமாக `WWE’. சீமான் ஸ்டைலில் சொன்னால், உலக மற்போர் மகிழ் கலை நிறுவனம். பல ஆண்டுகளாக `ப்ரோ ரெஸ்லிங்’ எனப்படும் வல்லுநர் மல்லாடல் போட்டிகளை நடத்திவரும் மிகப் பிரபலமான நிறுவனம். வெறும் ஜட்டிதான் அணிந்திருப்பார்கள். ஆனால், பெல்ட்டுக்காக அடித்துக்கொள்வார்களே… அவர்களேதான். அவர்களைப் பற்றித்தான் இந்தத் தொடர் முழுக்கப் பேசவிருக்கிறோம். ஏனெனில், கிரிக்கெட், சினிமாவைத் தாண்டி பெரும்பாலான இந்தியச் சிறுவர்களின் பேசுபொருளாக இருந்தவர்கள் / இருக்கிறவர்கள் இந்த பெல்ட் ப்ரியர்கள்தான்.
நாம் கிழித்துப் போட்ட காலண்டர் பேப்பர்களிலும், கடிகார முள் கடந்து வந்த நேரத்திலும் பசை தடவி அவர்களை ஒட்டவைத்திருக்கிறோம். என்றோ ஒருநாள் அவர்களின் முகமோ, பெயரோ நம் மூளைக்கு எட்டும்போது, அங்கே ஒட்டியிருந்தவர்கள் நம்மை பிற்காலத்துக்கு இழுத்துவிடுகிறார்கள். அந்தத் தாள்களும் நிமிடமும் தாங்கியிருக்கும் வேறு பல நினைவுகளையும் மீட்டெடுத்து தருகிறார்கள். எனவே, இது ஒரு நாஸ்டால்ஜியா உணர்வை உங்களுக்குள் கிளப்பிவிடும் பயோ டெக்னாலஜி தொடராகவும் இருக்கலாம்!
முதல் நாள் மாலை `ரா’வையோ, `ஸ்மேக் டவுனை’யோ பார்த்துவிட்டு, அன்றிரவே அதன் மறுஒளிபரப்பையும் `கொட்ட கொட்ட’ கண் விழித்துப் பார்த்துவிட்டு, அடுத்த நாள் காலையும் அலாரம்வைத்து எழுந்து அதன் `மறுமறு’ஒளிபரப்பையும் பார்த்தவர்கள் நிறையபேர். சிலர் ஆர்வமின்மை, நேரமின்மை போன்ற காரணங்களால் பார்ப்பதை நிறுத்தியிருப்பீர்கள். இன்னும் சிலர் ஒருசில எபிசோடுகளை மட்டும் பார்த்துவிட்டு, `இது ஃபேக். அத்தனையும் நடிப்பு. இதெல்லாம் எப்படித்தான் பார்க்கிறாய்ங்களோ!’ எனச் சலித்திருப்பீர்கள். உண்மையில், ப்ரோ ரெஸ்லிங்கில் வீரர்கள் நிஜமாகவே அடித்துக்கொள்வதில்லை என்பது, பார்ப்பவர்கள் அனைவருக்குமே தெரியும். பிறகு ஏன் அதை ரசிக்கிறோம்?
ப்ரோ ரெஸ்லிங் போட்டிகள் `ஃபேக்’கானது எனும் வார்த்தையைவிட `ஸ்க்ரிப்ட்’ செய்யப்பட்டது எனும் வார்த்தைதான் பொருத்தமானதாக இருக்கும். சண்டை தொடங்குவதற்கு முன்பே இங்கே வெற்றியாளன் தீர்மானிக்கப்பட்டுவிடுகிறான். ஒரு மேடை நாடகத்தில் வரும் சண்டைக்காட்சியைப் போன்றுதான் ப்ரோ ரெஸ்லிங் போட்டிகளைப் பார்க்க வேண்டும். அது எவ்வளவு சுவாரஸ்யமாக, நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதுதான் மேட்டர். சில நேரங்களில் அதை அரங்கேற்றும்போது ஏற்படும் தவறுகளால் நிஜமாகவே அடிபடும், எலும்பு உடையும், சதை கிழியும், ரத்தமும் வழியும். சண்டைனா சட்டை கிழியத்தானே செய்யும்!