நடிகை தமன்னா நடிப்பில் பெட்ரோமாக்ஸ் என்ற படம் நாளை(அக்.,11) வெளியாகிறது. அவர் அளித்த பேட்டி: கண்ணே கலைமானே, சைரா என சீரியஸான படங்களில் அடுத்தடுத்து நடித்துள்ளேன். அதனால், தொடர்ந்தும் சீரியஸான படங்களில் நடிக்க யோசித்தேன். அந்த நேரத்தில்தான், வித்தியாசமான பெட்ரோமாக்ஸ் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.
பெட்ரோமாக்ஸ் படம் முழுக்க முழுக்க காமெடி படம் என்பதால், உடனே ஒப்புக் கொண்டேன். பெட்ரோமாக்ஸ் லைட்டேத்தான் வேணுமான என கவுண்டமணி – செந்தில் ஆகியோர் இணைந்து ஏற்கனவே பேசிய வசனம் குறித்து எல்லோரும் பேசுகின்றனர். அது குறித்து, நிறைய கேட்கவும் செய்கின்றனர். அந்த வசனம் குறித்து எனக்கு பெரிதாக தெரியாது என்பதால், அதை இயக்குநர் ரோகின் எனக்கு விளக்கினார். ஒரு காலத்தில் காமெடியில் கலக்கிய நடிகர் கவுண்டமணியை சந்திக்க எனக்கு ஆவல் ஏற்பட்டிருக்கிறது. விரைவில், கவுண்டமணியை சந்திப்பேன்.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டும்தான் நடிக்க வேண்டும் என்று வற்புறுத்துவது போன்ற ஒரு செய்தியைப் பரப்புகின்றனர். அது தவறு. அப்படி யாரிடமும் நான் சொல்லவில்லை. ஒரு வட்டத்துக்குள் சிக்கி, அதற்குள்ளேயே நடிக்க வேண்டும் என நான் நினைக்கவில்லை. எல்லா விதமான படங்களிலும் நடிக்க தான் விருப்பம். இப்போது, வாழ்க்கை வரலாற்று படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். நடிகை ஸ்ரீ தேவியின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கில், அதில் ஸ்ரீ தேவியாக நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தால் பெரிதும் மகிழ்வேன்.
இவ்வாறு நடிகை தமன்னா கூறினார்.

