குழந்தை நட்சத்திரமாக நான்கு வயதில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
இருந்தாலும் அவரைத் தேடி வந்த இரண்டு பெரிய வாய்ப்புகளை அவர் வேண்டாமென்று மறுத்ததைத் தற்போது பலரும் குறிப்பிடுகிறார்கள். ஹாலிவுட்டின் பெரிய இயக்குனரான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் 1993ம் ஆண்டு ‘ஜுராசிக் பார்க்’ படத்தில் நடிக்க ஸ்ரீதேவியை அழைத்துள்ளார். ஆனால், அந்தக் கதாபாத்திரம் சிறிய கதாபாத்திரம் என்பதால் அதில் அவர் நடிக்க மறுத்துவிட்டார். அந்தப் படம் வெளிவந்து உலக அளவில் புகழ் பெற்றது. அதில் ஸ்ரீதேவி நடித்திருந்தால் அவருடைய புகழ் ஹாலிவுட் வரை பரவியிருக்கும்.
அது போல, தெலுங்கில் தயாராகி உலக அளவில் பெரிய வசூலைப் பெற்ற ‘பாகுபலி’ படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்த சிவகாமி கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் ஸ்ரீதேவியைத்தான் அணுகினார்கள். ஆனால், சில காரணங்களால் அவர் அதில் நடிக்க மறுத்துவிட்டார். அந்தப் படம் உலக அளவில் பெரிய சாதனை படைத்த இந்தியப் படமாக அமைந்தது.
‘ஜுராசிக் பார்க், பாகுபலி’ படங்களில் ஸ்ரீதேவி நடித்திருந்தால் அவருடைய திரையுலக மகுடத்தில் அந்தப் படங்கள் தனி இடத்தைப் பிடித்திருக்கும் என ஸ்ரீதேவியின் ரசிகர்கள் கருதுகிறார்கள்.