துபாய் சட்டவிதிமுறைகள்படி வெளிநாட்டவர் யாரவது மருத்துவமனைக்கு வெளியே இறந்துவிட்டால், மரணம் குறித்து காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தடயவியல் சோதனை நடத்தப்படும். அதன் பின் எம்பாமிங் செய்யப்பட்டு, அவரது நாட்டுக்கு அனுப்பப்படும், அந்த நடைமுறைதான் தற்போது ஸ்ரீதேவி விவகாரத்திலும் பின்பற்றப்பட்டு வருகிறது.
ஸ்ரீதேவியின் மரணம்
திருமண நிகழ்ச்சிக்கு பின்னர் ஸ்ரீதேவி எமிரேட்ஸ் டவர்ஸ் ஹோட்டலில் உள்ள தனது அறையில் குளியலறை பாத் டப்பில் மயங்கி விழுந்ததால் அவரது உயிர் பிரிந்ததாக துபாய் ஊடகங்களில் செய்தி வெளியாகின. அவரது ரத்தத்தில் ஆல்கஹால் கலந்திருப்பதாகவும் தடயவியல் அறிக்கையும் பிரேத பரிசோதனை அறிக்கையும் தெரிவித்தன.
தாமதம் ஏன்?
நேற்றிரவு ஸ்ரீதேவியின் உடல் மும்பைக்கு கொண்டுவரப்பட்டு விடும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் இன்று தான் அவரது உடல் இந்தியாவிற்கு கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அரசு வழக்கறிஞரின் ஒப்புதல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது.
மும்பை வருவதில் தாமதம்
நடிகை ஸ்ரீதேவியின் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய சிறப்பு மருத்துவ குழு நியமிக்கப்பட்டுள்ளது. துபாய் காவல் நிலையத்திற்கு சென்ற இந்திய தூதரக அதிகாரிகளை துபாய் போலீஸ் திருப்பி அனுப்பியது. இது மறுபிரேத பரிசோதனை அல்ல தடய அறிவியல் ஆய்வுக்கு மட்டுமே என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அரசு வழக்கறிஞரின் ஒப்புதல் கிடைக்காததால் ஸ்ரீதேவி உடல் மும்பை வருவதில் தாமதம் ஏற்பட்டது.
காயத்தை விசாரிக்க பரிந்துரை
நடிகை ஸ்ரீதேவியின் தலையின் பின்புறத்தில் ஆழமான காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து காயம் குறித்து மீண்டும் விசாரணை செய்ய துபாய் அரசு வழக்கறிஞர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில் வெளியான தகவல்கள் தெரிவித்தன.
இந்தியாவிற்கு கொண்டு வர ஏற்பாடு
இதனிடையே கடந்த நான்கு நாட்களாக நீடித்த இழுபறி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ஸ்ரீதேவியின் உடல் ஒரு வழியாக போனி கபூரிடம் துபாய் போலீஸ் ஒப்படைத்துவிட்டது. இதைத் தொடர்ந்து எம்பாமிங் செய்வதற்கான நடைமுறை மேற்கொள்ளப்பட்டு இந்தியாவிற்கு கொண்டு வரப்படும்.
எனவும் துபாய் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.