இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை நீக்கி, கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆறாவது ஐ.பி.எல்., தொடரில் (2013) நடந்த ‘ஸ்பாட்–பிக்சிங்’ சூதாட்டம் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்ட ராஜஸ்தான் அணியின் ஸ்ரீசாந்த், அன்கித் சவான், சண்டிலா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) இம்மூவருக்கும் வாழ்நாள் தடை விதித்தது. இதுகுறித்து விசாரித்த டில்லி நீதிமன்றம், போதிய ஆதாரம் இல்லை என மூன்று பேரையும் இவ்வழக்கில் இருந்து விடுவித்தது. இருப்பினும், இம்மூவரின் வாழ்நாள் தடையை ரத்து செய்ய முடியாது என பி.சி.சி.ஐ., திட்டவட்டமாக தெரிவித்தது.
இதனையடுத்து தன் மீதான வாழ்நாள் தடையை பி.சி.சி.ஐ., உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டுமென, ஸ்ரீசாந்த், கேரள உயர் நீதிமன்றத்தை நாடினார். இதுகுறித்து விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், உடனடியாக ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை ரத்து செய்து உத்தரவிட்டது.