தமிழ்த் திரையுலகத்தில் தற்போது நடந்து வரும் ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென்றால் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கத்தைக் குறைத்தாலே போதுமானது என பல தயாரிப்பாளர்கள் கூறி வருகிறார்கள். ஆனால், டிஜிட்டல் நிறுவனங்கள் தியேட்டர்காரர்களிடம் கடுமையான சட்ட ஒப்பந்தத்தைப் போட்டு அதை அவர்கள் மீற முடியாமல் சிக்க வைத்துள்ளதாக பல தியேட்டர்காரர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
திரையரங்கு சங்கங்களில் உள்ள சில முக்கிய நிர்வாகிகளின் தியேட்டர்களுக்கு மட்டும் டிஜிட்டல் நிறுவனங்கள் மறைமுகமாக சில லாபகரமான விஷயங்களைச் செய்து தருவதுதான் அதற்குக் காரணம் என்றும் கிசுகிசுக்கிறார்கள். இரு தரப்பினருக்கிடையே போடப்படும் எந்த ஒரு ஒப்பந்தத்தையும் ஒரு தரப்பு வேண்டாம் என முடிவெடுக்கும் போது அதற்காக அந்த ஒப்பந்தங்களில் சில ஷரத்துகள் இருப்பது வழக்கம்.
ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடிவெடுத்தால் ஒரு மாதம் முன்போ, சில குறிப்பிட்ட காலத்திற்குள்ளோ முடிவுக்குக் கொண்டு வரலாம். அல்லது குறிப்பிட்ட ஒரு தொகையைக் கொடுத்தும் முடித்து வைக்கலாம். ஆனால், இவற்றைச் செய்யாமல் திரையரங்கு உரிமையாளர்களும் அமைதி காப்பது தான் ஆச்சரியமாக உள்ளது என்கிறார்கள்.
டிஜிட்டல் நிறுவனங்களுக்கான விபிஎப் கட்டணத்தைக் கட்டவே மாட்டோம் என்று உறுதியாக இருக்கும் தயாரிப்பாளர் சங்கம் கடந்த சந்திப்பில் அதை திரையரங்குகளே ஏற்க வேண்டும் என சொல்லியிருக்கிறார்கள். அதை எக்காலத்திலும் ஏற்க மாட்டோம் என திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் பன்னீர்செல்வம் கூறியுள்ள ஒரு ஆடியோ பதிவு வாட்ஸ் அப்பில் சுற்றி வருகிறது.
300 தியேட்டர்கள் வரை சொந்தமாக டிஜிட்டல் புரொஜக்டர் வைத்திருந்தும் அவர்கள் விபிஎப் கட்டணத்தை வாங்கியதும் தனிக்கதையாக இருக்கிறது. இந்த டிஜிட்டல் முறைக்கான முடிவு வந்தால் மட்டுமே ஸ்டிரைக்கும் முடிவுக்கு வரும்.