பழம்பெரும் காமெடி நடிகர் நாகேஷின் பேரனும், நடிகர் ஆனந்த் பாபுவின் மகனுமான கஜேஷ், கற்கண்டு படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். தாத்தாவைப்போன்று அந்தப் படத்தில் காமெடி ஹீரோவாக நடித்தார். ஆனால் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் கஜேஷ், ஸ்கூல் கேம்பஸ் என்ற படத்தில் பள்ளி மாணவனாக நடிக்கிறார்.
இந்தப்படத்தை ஏ.எம்.என் குரூப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஆர்.ராமநாராயணா தயாரித்து, இயக்குவதோடு அவரே முக்கிய கேரக்டரில் நடிக்கவும் செய்கிறார். கஜேசோடு, ராஜ்கமல், கீர்த்தி, காயத்திரி, மதன்பாப், டெல்லி கணேஷ், ரிந்து ரவி உள்பட பலர் நடிக்கிறார்கள். திரைக்கதை, வசனத்தை வி.கே.அமிர்தராஜா எழுதியுள்ளார், தேவா இசை அமைக்கிறார், அருள் வின்செண்ட் ஒளிப்பதிவு செய்கிறார்.
“இது தற்போதைய கல்வியில் கொண்டு வர வேண்டிய மாற்றங்கள் பற்றிய கதை. அதனை சுவாரஸ்யமான திரைக்கதையில் சொல்கிறோம். வெளிநாட்டு கல்விக்கும், நம் நாட்டு கல்விக்குமான வித்தியாசத்தை காட்டுகிறோம். சென்னை, டில்லி, அந்தமான் நிக்கோபார் தீவுகளில் படப்பிடிப்பு நடந்ததுள்ளது. ஆகஸ்ட் மாதம் படத்தை வெளியிடுகிறோம” என்கிறார் இயக்குனர் ராமநாராயணா.

