பிரபல இந்தி நடிகர் ஷாரூக்கான், கடந்த ஆண்டில் ஜீரோ என்ற படத்தில் நடித்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகி வெளியான அந்தப் படம், தியேட்டர்களை விட்டு உடனடியாக ஓடியது. எந்த நேரத்தில் படத்துக்கு ஜீரோ என பெயரிட்டனரோ, வசூலிலும் படம் ஜீரோ என்ற அளவுக்குத்தான் இருந்தது.
இந்தத் தோல்வியைப் போக்கும்விதமாக, உடனடியாக ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என, அவருடைய ரசிகர்கள் பலரும் அவருக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால், ஷாரூக்கான், அமைதியும்-பொறுமையும் காக்கத் துவங்கினார். அடுத்தடுத்து வந்த சில படங்களில் நடிப்பதைத் தவிர்த்தார். நல்ல கதையம்சம் உள்ளப் படங்களில் நடித்தால்தான், படம் வெற்றி அடையும் என முடிவெடுத்தவர், நிறைய கதைகளை கேட்கத் துவங்கினார். ஆனால், எந்தப் படம் குறித்தும் அவர் முடிவெடுக்கவில்லை.
இதனால், ஜீரோ படத்துக்குப் பின், ஒண்ணரை ஆண்டுகளாகியும் அவர் ஒரு படத்திலும் நடிக்கவில்லை. இயக்குநர்கள் தூம், அட்லி உள்ளிட்ட பலரிடமும் தனக்கான கதை கேட்டு வைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், எந்த முடிவும் அவர் எடுக்கவில்லை.
இந்நிலையில், அவரை உடனடியாக படத்தில் நடிக்க வலியுறுத்தி, அவருடைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் #WeWantAnnouncementSRK என்ற ஹேஷ் டேக்கை உருவாக்கி அதை ட்ரெண்டிக்காக்கி இருக்கின்றனர். அதில், உடனடியாக ஷாரூக்கான் படத்தில் நடிக்க வேண்டும்; இல்லையென்றால், தற்கொலை செய்து கொள்வோம் என்றும் அவருடைய ரசிகர்கள் பலரும் கூறி உள்ளனர்.

