‘மெர்சல்’ படம் அனேகமாக கடைசி வார ஓட்டத்தில் இருக்கிறது என்றே சொல்லலாம். ஒரு சில தியேட்டர்களைத் தவிர பெரும்பாலான தியேட்டர்களில் இந்த வாரத்துடன் படத்தை எடுத்து விட வாய்ப்புகள் அதிகம். தமிழ்நாட்டில் 120 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ள படம் வெளிநாடுகளில் 100 கோடி வசூலைத் தாண்டுமா என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்றுடன் முடிவடைந்த வசூலில் வெளிநாடுகளில் 15 மில்லியன் டாலர்களை ‘மெர்சல்’ படம் வசூலித்துள்ளதாகத் தெரிகிறது. ரூபாய் மதிப்பில் 97 கோடி வரை வசூலாகியுள்ளது. வெளிநாடுகளில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட தியேட்டர்களில் கடந்த வாரத்துடன் படத்தை எடுத்துவிட்டார்கள். ஒரு சில நாடுகளில் சில தியேட்டர்களில் மட்டுமே வார இறுதிக் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதனால் வெளிநாடுகளில் 100 கோடி ரூபாய் வசூலைப் பெறுவதில் வாய்ப்புகள் குறைவுதான்.
வெளிநாடுகளில் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிய படங்கள் பட்டியலில் “எந்திரன், சிவாஜி, சிங்கம் 2, துப்பாக்கி, தசாவதாரம்” ஆகிய படங்கள் உள்ளன. அந்தப் படங்களின் பட்டியலில் ‘மெர்சல்’ இடம் பெறுவது சிலபல கோடிகள் வித்தியாசத்தில் நிறைவேறாமல் போய்விடும் போலவே தெரிகிறது.
ஒட்டு மொத்தமாக மொத்த ஓட்ட முடிவில் உலக அளவில் ‘மெர்சல்’ படம் 250 கோடியைக் கடக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.