ஒரு காலத்தில் சினிமா மார்க்கெட் முடிவடைந்த பின், டிவி சீரியல் பக்கம் செல்வதுதான் பல நடிகர்கள், நடிகைகளின் வழக்கமாக இருந்தது. ஆனால், சினிமாவில் பிஸியாக இருக்கும் போதே இப்போது வெப் சீரிஸ் பக்கம் தாவுவது வழக்கமாகி வருகிறது.
இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் வெப் சீரிஸ்கள் இன்னும் பெரிய அளவில் பிரபலமாகவில்லை. இருந்தாலும் பல நிறுவனங்கள் புதிது புதிதாக வெப் சீரிஸ்களை எடுத்து வருகின்றன.
சமந்தா, தமன்னா, காஜல் அகர்வால், ஹன்சிகா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் வெப் சீரிஸ்கள் மூலம் இந்த டிஜிட்டல் உலகத்திற்குள் வர ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களுக்கு அடுத்து ரகுல் ப்ரீத் சிங்கும் வர உள்ளார்.
‛‛தனக்கும் வெப் சீரிஸ்களில் நடிக்க ஆர்வமிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். பெரிய திரைதான் விருப்பம். ஆனால், இப்போது வெப் சீரிஸ்கள் நமது திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு களமாக இருக்கிறது” என அதற்குக் காரணம் தெரிவித்துள்ளார். விரைவில் ரகுலையும் வெப் சீரிஸ்களில் எதிர்பார்க்கலாம்.

