2019ம் ஆண்டின் கடைசியில் எந்தப் படங்கள், எந்தப் பிரபலங்கள் முன்னிலை என ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் இருப்பார்கள். டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் கடந்த சில நாட்களாக இது குறித்து கடும் பரபரப்பு ஏற்பட்டது. விஜய், அஜித் ரசிகர்கள் அவர்களது அபிமான நடிகர்களின் படங்களும், அவர்களும் பற்றி அதிகமாகப் பகிர்ந்து சண்டை போட்டுக் கொண்டார்கள்.
விஜய், அஜித் ரசிகர்களின் ஆர்வத்தைக் குறைக்கும் வகையில் இணைய உலகின் முக்கிய தேடுதல் இணையதளமான கூகுள் 2019ம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய திரைப்படம் சம்பந்தமான விவரங்களை வெளியிட்டுள்ளது.
இவற்றில் அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ படத்திற்கு 4வது இடமும், ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்திற்கு 5வது இடமும், விஜய் நடித்த ‘பிகில்’ படத்திற்கு 6வது இடமும்தான் கிடைத்துள்ளன. ஆனால், ராகவா லாரன்ஸ் நடித்த ‘காஞ்சனா 3’ ஆச்சரியப்படும் வகையில் 3வது இடத்தைப் பிடித்துள்ளது.
முதலிடத்தில் ‘சாஹோ’, இரண்டாவது இடத்தில் ‘கேஜிஎப்’, 7வது இடத்தில் ‘டியர் காம்ரேட்’, 8வது இடத்தில் ‘ஐஸ்மார்ட் சங்கர்’, 9வது இடத்தில் ‘வினய விதேய ராமா’, 10வது இடத்தில் ‘அசுரன்’ படமும் இடம் பிடித்துள்ளன.
அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொன்டா முதலிடத்தில் உள்ளார். 2வது இடத்தில் நடிகை ராஷ்மிகா, 3வது இடத்தில் டகுபட்டி வெங்கடேஷ், 4வது இடத்தில் ஷாலினி பான்டே, 5வது இடத்தில் அக்கினேனி நாகார்ஜுனா ஆகியோர் உள்ளனர். இந்தப் பட்டியலில் தமிழ் நடிகர்கள் யாரும் இல்லாதது ஆச்சரியமானது.
அதிகம் தேடப்பட்ட டாப் 10 பாடல்கள் பட்டியலில் தமிழ்ப் பாடல் ஒன்று கூட இல்லை. அந்தப் பட்டியலில் தெலுங்குப் பாடல்கள்தான் அதிக இடத்தைப் பிடித்துள்ளன.
ஒரு வேளை தமிழ்த் திரைப்படப் பிரபலங்களைப் பற்றி பலருக்கும் அதிகம் தெரிந்துவிட்டதோ ?.

