பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தரை தான் எதிர்கொண்டதில்லை இது தனக்கு அதிர்ஷ்டமே என்று விராட் கோலி அக்தரைப் புகழ்ந்ததையடுத்து ஷோயப் அக்தரும் விராட் கோலியைப் புகழ்ந்துள்ளார்.
பிரேக்பாஸ்ட் வித் சாம்பியன்ஸ் என்ற ஜாலி கலந்துரையாடலில் கோலி கூறும்போது, “நான் ஷோயப் அக்தரை எதிர்கொண்டதில்லை, ஆனால் தம்புல்லாவில் அவர் ஆடிய போது நானும் ஆடினேன். நான் அவர் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியவில்லை. நான் முன்னமேயே அவுட் ஆகிவிட்டேன். ஆனால் அவர் பந்து வீசியதைப் பார்த்து அரண்டு போனேன், பிற்காலத்தில் கூட அவர் அபாயகரமாகவே வீசினார். அப்போது நினைத்தேன் அவர் உச்சத்தில் இருந்த போது பேட்ஸ்மென்கள் அவரை எதிர்கொள்ள விரும்பியிருக்க மாட்டார்கள் என்று” என்றார்.
இதற்கு அக்தர் பதில் கூறுமாறு ட்வீட் செய்கையில், “கோலி பேட் செய்யும் போது நான் பந்து வீசாதது நல்லது என்று நினைக்கிறேன். ஜோக்குகள் ஒரு புறம் கிடக்கட்டும், அவர் ஒரு கிரேட் பேட்ஸ்மென், அவருக்கு வீசுவது நிச்சயமாக ஒரு நல்ல சவாலாக அமைந்திருக்கும்” என்று ட்வீட் செய்துள்ளார்.
பிற்பாடு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிலும் அக்தர் கூறும்போது, “விராட் கோலி ஒரு கிரேட் பேட்ஸ்மென், அபாரமான சாதனையாளர், நான் நிறைய இந்திய வீரர்களுடன் பழகியிருக்கிறேன், அவர்களுடன் நட்பு பாராட்டியிருக்கிறேன். சவுவர் கங்குலி, சேவாக் ஆகியோருடன் பழகியிருக்கிறேன், எனவே இது பரஸ்பர பாராட்டுதலே” என்றார்.
கோலி குறிப்பிடும் அந்தத் தம்புல்லா ஒருநாள் போட்டி, 2010 ஆசியக் கோப்பைப் போட்டியாகும். இந்தப் போட்டியில் ஷோயப் அக்தர் பாகிஸ்தான் அணியில் இருந்தார், இந்திய அணியில் விராட் கோலி இருந்தார். இந்தப் போட்டியில் விராட் கோலி 18 ரன்களில் சயீத் அஜ்மல் பந்தில் ஆட்டமிழந்தார், அக்தரை எதிர்கொள்ள வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தியா அந்தப் போட்டியில் 268 ரன்கள் இலக்கை த்ரில்லாக விரட்டி வெற்றி பெற்றது, தோனி, கவுதம் கம்பீர் கூட்டனி கைகொடுக்க, கடைசியில் ஹர்பஜன் சிங் மொகமது ஆமீர் பந்தை சிக்சருக்குத் தூக்கி இந்தியாவை வெற்றி பெறச் செய்தார், கம்பீர் அவரது தைரியமான 83 ரன்களுக்காக ஆட்ட நாயகன் விருது பெற்றார்.