துபாயில் தனது குளோபல் கிரிக்கெட் அகாடமியைத் திறந்து வைத்து தன் கனவை நிறைவேற்றிய தோனி, தன் மீதான விமர்சனங்களுக்கு அவரது பாணியிலேயே கூலாக பதில் அளித்தார்.
அஜித் அகார்க்கர் உள்ளிட்டோர் தோனியின் பேட்டிங் குறித்து விமர்சனம் வைத்தது பற்றி அவரிடம் கேட்ட போது,
“அனைவருக்கும் கருத்து கூற உரிமை உள்ளது, அது மதிக்கப்பட வேண்டியது அவசியம்” என்று பெருந்தன்மையுடனும் முதிர்ச்சியுடனும் பதில் அளித்தார்.
அவர் மேலும் கூறிய போது, “இந்திய கிரிக்கெட் அணியின் அங்கமாக இருப்பதே மிகப்பெரிய உத்வேகம். கடவுளின் வரப்பிரசாதம் இல்லாத வீரர்கள் கூட மிகத்தொலைவு வரை தங்கள் விளையாட்டில் சென்றுள்ளனர். காரணம் அவர்களுக்கு இந்திய அணி மீதும் கிரிக்கெட் மீதும் உள்ள ஆர்வம், நேயம். பயிற்சியாளர்கள் இதனைத்தான் கண்டுபிடிக்க வேண்டும். அனைவரும் நாட்டுக்கு ஆடிவிட முடியாது.
கிரிக்கெட் அகாடமியைப் பொறுத்தவரை, நான் எப்போதுமே முடிவுகளை விட வழிமுறைகளையே பெரிதும் நம்புபவன். நான் ஒருபோதும் முடிவுகள் பற்றிக் கவலைப்பட்டதில்லை. நான் எது சரி என்று படுகிறதோ அதைத்தான் செய்து வந்துள்ளேன். அந்தச் சூழ்நிலையில் 10 ரன்கள் தேவையாக இருந்தாலும் 14 ரன்கள் தேவையாக இருந்தாலும், அல்லது 5 ரன்களே தேவையாக இருந்தாலும் எது சரியானதோ அதைத்தான் செய்வேன்.
நான் வழிமுறைகளிலேயே ஆழ்ந்து விடுவேன். முடிவுகள் பற்றிய சுமையை நான் சிந்திப்பதில்லை” என்றார்.
சிறுவர்கள் மத்தியில் அவரது பேவரைட் ஹெலிகாப்டர் ஷாட்டைப் பற்றி கூறும்போது,
“சாலைகளில் டென்னிஸ் பந்துகளில் ஆடிய காலத்தில் அந்த ஷாட்டைக் கற்றுக் கொண்டேன். அது கடினமானது, டென்னிஸ் பந்தில் அந்த ஷாட்டை ஆடும்போது மட்டையின் அடியில் பட்டாலும் நீண்ட தூரம் பந்து செல்லும், ஆனால் தோல் பந்தில் நடுமட்டையில் பந்து பட்டால்தான் தொலைவு செல்லும். எனவே அதற்கு நிறைய பாடுபடவேண்டும். நான் இவர்களை (சிறு வீரர்களை) ஹெலிகாப்டர் ஷாட் ஆட பரிந்துரை செய்ய மாட்டேன், அது இவர்களுக்கு காயத்தை ஏற்படுத்தும்” என்றார் தோனி.
