வயலில் விதைக்கவேண்டிய விதை நெல்லை, வீதியில் விதைக்கின்ற நிலைமைக்கு விவசாயி தள்ளுப்பட்டுள்ளோம் என்கிறார்கள் டெல்டா மாவட்ட விவசாயிகள்.
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்க வந்த விவசாயிகள் கலெக்டர் அலுவலக வாசலிலேயே விதை நெல்லை கொட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதுகுறித்து நசுவிணி ஆறு விவசாயிகள் சங்கத் தலைவர் வீரசேனனிடம் பேசினோம், கடந்த 6 ஆண்டுகளாக காவிரியில் தண்ணீர் இல்லை. தண்ணீர் இல்லாததால் குறுவை, சம்பா பொய்த்து போய்விட்டது. குறுவையும், சம்பாவும் பொய்த்து போனதால் விவசாயிகள் வாழ்க்கையில் நிம்மதி இல்லை. கடந்த ஆண்டுக்கான வறட்சி நிவாரணம் தருவதாகச் சொன்னார்கள். ஆனால், இதுநாள் விவசாயிகளுக்கு நிவாரணம் முழுமையாகப் போய் சேரவில்லை.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான சிறப்புத் தொகுப்பு திட்டத்தை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. மானிய விலையில், சிங்க்சல்பேட், நுண்ணூட்ட பொருள்கள் தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். ஆற்றில் தண்ணீர் வரமால், வயலில்களில் இருந்த புற்களைகூட மாடுகள் மேய்ந்த நிலையில், விவசாய நிலங்கள் வெடித்து கிடக்கின்றன. மானியத்தில் கொடுக்கு சிங்க்சல்பேட், நுண்ணூட்ட பொருள்களை எங்கே கொண்டுபோய் போடுவது. இதையெல்லாம் முதலில் ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
கர்நாடகவிடமிருந்து காவிரியில் தண்ணீர் வரவேண்டுமென்றால் நீதிமன்றத்தை நம்பி பிரயோஜனம் இல்லை. கர்நாடக அரசிடம் முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அனைத்துக் கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். கர்நாடகத்திடமிருந்து தண்ணீர் பெறமால் தொகுப்புத் திட்டங்களை அறிவித்து என்ன பயன்.
மானியத் திட்டங்களெல்லாம் ஆளும் கட்சிக்காரர்களுக்கே போய் சேருகிறது. உண்மையான பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குப் போய் சேருவதே இல்லை. சென்ற ஆண்டு பயிர்காப்பீடு செய்தோம், அதற்கான தொகை இன்னும் வரவில்லை. ஆனால், இந்த ஆண்டு பயிர் காப்பீட்டிற்கு பணம் செலுத்துவதற்கு 31.07.2017 கடைசி என அறிவித்திருக்கிறார்கள். அதிமுக அரசு விவசாயிகளை வஞ்சிக்கின்ற அரசாகவே இருக்கிறது.
வயல்களில் மட்டுமே விதைகளை விதைத்து பழக்கப்பட்ட டெல்டா விவசாயிகள், விதைகளை வீதியில் வீசுகின்ற நிலைமைக்கு வந்துவிட்டோம், எங்களுடைய வலியும், வேதனையும் இப்போதாவது அரசுக்குப் புரியுமா? என்று தெரியவில்லை என்றார் வரக்தியில்.