சமூக வலைதளங்களில் வெளியாகும் பல தகவல்கள் பொய்யானவை. சமீபத்தில் குழந்தை கடத்த வந்தவர்கள் என்று கூறி திருவண்ணாமலையில் நடந்த தாக்குதலில் மூதாட்டி ஒருவர் கொல்லப்பட்டார்.
இதுதொடர்பாக போலீஸார், “சமூகவலைதளங்களில் பரப்பப்படும் தகவல்களை நம்ப வேண்டாம், சந்தேகப்படும் நபர்கள் யாரும் இருந்தால் போலீஸிடம் தெரிவிக்கவும், சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம்” என மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன், டுவிட்டரில், “வதந்திகள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக் கூடியவையாக இருப்பது கவலையளிக்கிறது. மக்கள் விழிப்புடன் இருப்பதோடு பொறுப்புடன் இருப்பதும் முக்கியம். சட்டத்தை கைகளில் எடுத்துக் கொண்டு செயல்படுவது பொறுப்புள்ள குடிமக்களின் அடையாளமன்று. காவல் துறையிடம் தெரிவிப்பதே நமது பொறுப்பும் கடமையும் ஆகும்” என பதவிட்டிருக்கிறார்.