ஒரு பாடலுக்கு 10 கோடி செலவு, கிளாமரான நாயகியுடன் ரொமான்ஸ் லுக், நடனக் கலைஞர்களுடன் ஸ்டைலான போஸ் என அறிமுக நடிகர் சரவணன் அசத்திய போட்டோக்கள்தான் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பான கமெண்ட்டுகளுடன் வலம் வருகின்றன.
தனது கடை விளம்பரங்கள் மூலம் அதிரடியை ஏற்படுத்திய சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் நாயகனாக நடிக்க, ஜேடி ஜெர்ரி இயக்கி வரும் புதிய படத்தினைப் பற்றிய பரபரப்பு அது பற்றிய அறிவிப்பு வெளிவந்த போதே இருந்தது. இப்போது அடுத்த அப்டேட்டாக 10 கோடி ரூபாய் செட்டில் சரவணன், நாயகி கீதிகா திவாரியுடன் நடனமாடிய பாடல் காட்சி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினி, விஜய், அஜித் ஆகியோர் நடிக்கும் படங்களின் பாடல்களுக்குக் கூட 10 கோடி ரூபாய் செலவில் அரங்கம் அமைத்து பாடலைப் படமாக்க மாட்டார்கள். ஒரு பாடலுக்கே இவ்வளவு செலவு என்றால் ரஜினி, விஜய், அஜித் ஆகியோருக்கு ‘டப் பைட்’ கொடுக்கும் அளவில் முழு படமும் உருவாகப் போகிறது என்பது மிகையாக இருக்க வாய்ப்பில்லை.

