மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘லூசிபர்’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை சிரஞ்சீவி வாங்கியுள்ளார். நடிகர் பிரித்விராஜ் இயக்கியிருந்த இந்தப் படம், மலையாள சினிமாவில் முதன்முறையாக ரூ.200 கோடி வசூலித்த படம் என்கிற பெருமையைப் பெற்றது. இந்த படத்தின் கதை பிடித்துப்போன சிரஞ்சீவி, சமீபத்தில் சைரா பட புரமோசன் நிகழ்ச்சிகளுக்காக கேரளா வந்தபோது இந்த படத்தின் ரீமேக் உரிமையை தான் வாங்கியிருப்பதாக மேடையிலேயே அறிவித்தார்.
அரசியல் பின்னணியில் உருவாகி இருந்த இந்தப்படத்தில் மோகன்லால் கதாபாத்திரத்தில் தான் சிரஞ்சீவி நடிக்க இருக்கிறார். அதேசமயம் சைரா படம் வெளியான பின்பு பிரபல தெலுங்கு இயக்குனர் கொரட்டால சிவா டைரக்ஷனில் புதிய படத்தில் சிரஞ்சீவி நடிப்பதற்காக சமீபத்தில் பூஜை போடப்பட்டது. அந்த படம் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒன்று. அதே சமயம் லூசிபர் பட ரீமேக்கை ராம்சரண் நடித்த ரங்கஸ்தலம் பட இயக்குனர் சுகுமார் இயக்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

