ஒரு படத்தின் பூஜையில் தொடங்கி ரிலீஸ் வரை படத்தை பற்றி வண்டி வண்டியாய் செய்திகள் வெளிவரும் காலத்தில் சத்தமே இல்லாமல் ஒரு படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சித்தார்த். படத்தின் டைட்டில் டக்கர். கப்பல் படத்தை இயக்கிய ஜி.கிருஷ் தற்போது சித்தார்த் நடிப்பில் சைத்தான் கா பச்சா என்ற படத்தை இயக்கி வருகிறார். இவர்கள் இருவரும் இணைந்துதான் டக்கர் படத்தையும் உருவாக்கி உள்ளனர்.
இதில் மஜிலி தெலுங்கு படத்தில் நடித்த திவ்யான்ஷா கவுசிக் நடித்துள்ளார். இவர்கள் தவிர அபிமன்யூ சிங், யோகி பாபு, முனீஷ் காந்த், ஆர்.ஜே.விக்னேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைக்கிறார். வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் ஜி.கிருஷ் கூறியதாவது: படம் இறுதி வடிவத்துக்கு வரும்வரை எந்தவித செய்திகளையும் கசியவிட வேண்டாம் என்று முடிவு செய்திருந்தோம். கடந்த பிப்ரவரி மாதம் படப்பிடிப்பைத் துவக்கினோம். இப்போது பின் தயாரிப்புப் பணிகள் முடியும் தறுவாயில் இருக்கிறது. எதிர்வரும் ஜனவரி மாதம் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம்.
சைத்தான் கா பச்சா படத்தின் படப்பிடிப்பு நடக்கும்போது, ஒரு கதைக் கருவை சித்தார்த்திடம் சொன்னேன். உடனே அவர் இந்தக் கதைக் கருவை விரிவாக்கி முழுமையான ஸ்க்ரிப்படாக எழுதும்படி சொன்னார். எனது முதல் படைப்பான கப்பல் படத்தைத் தயாரித்த சுதன் மற்றும் ஜெயராம் இருவரும் இணைந்து இந்தப் படத்தையும் தயாரித்திருக்கிறார்கள். என்றார்.

