விஜய் நடிப்பில் வெளியாகி வரும் படங்கள் அனைத்தும் கடந்த பல ஆண்டுகளாகவே சர்ச்சையில் சிக்கி வருகின்றன. அந்தவகையில் தற்போது தீபவாளிக்கு வெளியாகி இருக்கும் சர்கார் படமும் அதற்கு விதிவிலக்கு அல்ல.
சர்கார் படத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயரை, வரலட்சுமி கேரக்டருக்கு வைத்து தவறாக சித்தரிக்கப்பட்டு இருப்பது, அரசின் இலவச திட்டங்களை விமர்சித்திருப்பதற்கு ஆளும் அதிமுக., அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அமைச்சர்கள் ஒவ்வொருவராக படத்தை எதிர்த்து வருகின்றனர். விஜய், முருகதாஸ் மற்றும் தயாரிப்பாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், முருகதாஸ் மீது தேச துரோக சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், தேவராஜன் என்பவர் புகார் அளித்திருக்கிறார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது :
தீபாவளிக்கு வெளியாகி உள்ள சர்கார் படத்தில், இலவச மிக்சி மற்றும் கிரைண்டர்களை, தீயில் தூக்கி போட்டு கொள்ளுத்துவது போன்ற காட்சிகளை முருகதாஸ் வைத்துள்ளதை பார்த்து வேதனை அடைந்தேன். இது தமிழக அரசை இழிவுப்படுத்தும் நோக்கத்தில் எடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு எதிராக எழும் எந்த ஒரு எதிர்ப்பும், நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் சீர் கெடுக்கும்.
முருகதாஸ் சட்ட ஒழுங்கை சீரழிக்கும் வகையில் சர்கார் படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார். மாநில அரசுக்கு எதிராக வன்முறை செய்ய வேண்டும் எனும் நோக்கில் படம் எடுத்த முருகதாஸை, தேச துரோகியாக கருத வேண்டும். அவர் மீது இந்திய குற்றவியல் சட்டம் (தேச துரோகம்) பிரிவு 124-ஏ-வின் நடவடிக்கை எடுக்கும்படி கமிஷனரை பணிவுடன் கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
