மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர் ஷேன் நிகம். தமிழில் சீனுறாசாமியின் டைரக்சனில் விரைவில் அறிமுகமாக உள்ளார். இந்தநிலையில் தற்போது மலையாளத்தில் ‘வெயில்’ என்கிற படத்தில் நடித்து வந்தார்.. கடந்த மாதம் அவருக்கும் படத்தின் தயாரிப்பாளர் ஷோபி ஜார்ஜ் என்பவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால் வெயில் படத்திற்கு சரியாக ஒத்துழைப்பு கொடுக்காத ஷேன் நிகம் அந்த படத்திற்காக வைத்திருந்த தனது கெட்டப்பை இன்னொரு படத்திற்காக மாற்றினார். அது பெரிய பிரச்சினையாக வெடித்தது
இதைத்தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கமும் நடிகர் சங்கமும் இணைந்து இரு தரப்பையும் சமாதானப்படுத்தி அதன்பிறகு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது.. இரண்டு நாட்கள் வழக்கம்போல் அமைதியாக சென்ற நிலையில் ஷேன் நிகம் மீண்டும் தனது டார்ச்சரை ஆரம்பித்தார் என்று சொல்லப்படுகிறது.. வேண்டுமென்றே படப்பிடிப்புக்கு இவர் தாமதமாக வருவதால் படக்குழுவினர் மட்டுமல்லாமல் மற்ற நடிகர்கள் கூட இவருக்காக காத்திருக்க வேண்டியிருக்கிறதாம்.
அதனாலேயே ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பை முடிக்க நள்ளிரவு ஆகி விடுகிறது என்றும் கூறப்படுகிறது. ஆனால் நள்ளிரவு வரை தன்னை நடிக்கவைத்து கஷ்டப்படுத்துகிறார்கள் என்று புகார் பத்திரம் வாசித்து இருக்கிறார் ஷேன் நிகம். இதனை தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து இனி ஷேன் நிகம் நடிக்கும் படங்களை தயாரிப்பதில்லை என்றும் அவருக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்றும் அதிரடியாக முடிவு செய்து அறிவிக்கப்பட்டுள்ளதாம்.

