தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் மீது பாலியல் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. தற்போது மீ டூ மூலம் பலரும் பிரபலங்கள் மீது பாலியல் புகார்களை கூறி வரும் நிலையில் ஸ்ரீரெட்டி மீண்டும் பாலியல் புகார் ஒன்றை கூறி உள்ளார்.
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ஜீவன் ரெட்டி தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக ஸ்ரீரெட்டி தனது பேஸ்புக் பக்கத்தில் குற்றம்சாட்டி உள்ளார். அவர் தனது பதிவில், இதனை அரசியல் நாடகம் என தெலுங்கானா அரசு கூறலாம். ஆனால் எனது பேஸ்புக்கில் பல மாதங்களுக்கு முன்பிருந்தே இது போன்ற பாலியல் புகார்களை கூறி வருகிறேன். நான் வாய் திறந்தால் சந்திரசேகர ராவ் அரசில் உள்ள பலரும் பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகலாம்.
ஜீவன் ரெட்டி மக்கள் சேவைக்கு ஏற்றவர் அல்ல. அவர் பெண்கள் விஷயத்தில் மோசமானவர். அவர் என்னிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டினார். என் மீது தெலுங்கானா அரசு எந்த பழிவாங்கும் நடவடிக்கையிலும் ஈடுபடாது என நம்புகிறேன். என்னை எப்படி பாதுகாத்து கொள்வது என எனக்கு தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீரெட்டியின் இந்த புதிய பாலியல் புகார் தெலுங்கு திரையுலகை தொடர்ந்து தெலுங்கானா அரசியலிலும் புயலை கிளப்பி உள்ளது.