மலையாளத்தில் பெரிய பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் சரித்திரப் படம் மாமாங்கம். மம்முட்டி, உன்னி முகுந்தன், சித்திக், மணிகுட்டன், மணிகண்டன், கனிகா, அனு சித்தாரா, இனியா உள்பட பலர் நடித்துள்ளனர். மனோஜ் பிள்ளை ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜெயச்சந்திரன் இசை அமைத்துள்ளார். படம் மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளிவருகிறது. படம் பற்றி இயக்குனர் பத்மகுமார் கூறியதாவது:
1680 காலகட்டப் பின்னணியில் 12 வருடங்களுக்கு ஒரு முறை பழரிப்பட்டுவின் திருநாவையாவில் நடக்கும் கலாச்சார விழாவைகளமாக கொண்டு கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப்பின்னணியில் ராஜா ஜாமோரின் எனும் மன்னனின் அடக்குமுறைக்கு எதிராக போராடிய சாவேர்ஸ் எனும் ஒரு சிறு போராட்ட குழுவை மையமாக கொண்டது தான் மாமாங்கம்.
அக்குழுவில் அதுவரை எவராலும் சாதிக்க முடியாததை சாதித்த உண்மையான ஹீரோ, முடியாததை முடித்துக்காட்டிய வரலாற்றில் மறைக்கப்பட்ட மிகப்பெரும் போர் வீரனின் கதையை, அவனின் வெற்றியை பெரும் பட்ஜெட்டில் சொல்லும் பிரமாண்ட படைப்பாக இப்படம் இருக்கும்.
தமிழ் மொழிக்கு வசனங்களை இயக்குனர் ராம் எழுதியுள்ளார். மம்முட்டியே வசனமும் பேசி உள்ளார். தமிழர்கள் போன்றே பேசும் அவரது தமிழ்மொழி வன்மை, மலையாள நடிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தும். மாமாங்கம் படத்திற்கு தானே தமிழில் குரல் கொடுப்பதாக அவர் எடுத்துக்கொண்ட சிரத்தை எங்களை வெகுவாக ஆச்சர்யப்படுத்தியது. அதிலும் பழங்காலத் தமிழ் மொழி உச்சரிப்பை தன் குரலில் தமிழ் ரசிகர்களுக்காக பலமுறை ரிகர்சல் செய்து டப்பிங் செய்துள்ளார். படத்தினை ஒரே நேரத்தில் மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். என்றார்.

