தமிழில் ஏராளமான படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருப்பவர் சுகுமார். அடுத்ததாக தெலுங்கு படம் ஒன்றுக்காக ஆந்திராவுக்குச் செல்கிறார். இந்நிலையில், மாமனிதன் படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து, சுகுமார் கூறியிருப்பதாவது:
தர்மதுரை படத்திற்கு பின், இயக்குநர் சீனு ராமசாமி மற்றும் நடிகர் விஜய்சேதுபதி இருவருடனும் இணைந்து, மாமனிதன் படத்தில் பணியாற்றி இருக்கிறேன். மாமனிதன், தர்மதுரை மாதிரியான கதை அல்ல. அடுத்தவர்களைப் பார்த்து வாழக் கூடாது; நமக்காகத்தான் வாழ வேண்டும் என்ற செய்தியைச் சொல்லும் நடுத்தரவர்க்கத்து குடும்பக் கதை.
இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை காயத்ரி இருவரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கின்றனர். இருவருக்கும் சிறந்த நடிப்புக்கான தேசிய விருது கிடைத்தே ஆக வேண்டும். அப்படி கிடைக்கவில்லை என்றால், தேசிய விருதுக்கான மரியாதையை அந்த விருது இழந்து விட்டதாக அர்த்தம் என்கிறார்.

