நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவி பிரதீபாவின் தற்கொலைக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம் ஜூன் 7-ந்தேதி வெளியாகயிருப்பதால் நேற்று அவர் ஐதராபாத் சென்று அப்படத்தின் புரொமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதையடுத்து சென்னை திரும்பிய அவர், விமான நிலையத்தில் மீடியாக்களை சந்தித்தார்.
அப்போது, மாணவி பிரதீபாவின் தற்கொலை செய்து கொண்ட செய்தி தன்னை மிகவும் வருத்தமடைய செய்ததாக கூறிய ரஜினி, தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார். அதோடு, இதுபோன்ற தற்கொலைகள் தொடரக் கூடாது. அதனால் பெரியோர்கள் கலந்து பேசி இந்த பிரச்சனைக்கு ஒரு நிரந்தர முடிவை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
ஜிவி பிரகாஷ் டுவிட்டரில், தகுதி பெறுவதற்கான முறையான பயிற்சி அளித்த பின் போட்டிக்கு அழைத்திருக்க வேண்டும். எனது தங்கைகள் அனிதாவும், பிரதீபாவும் வஞ்சகமான பாடத்திட்டத்தால் தோற்கடிக்கப்பட்டனர். பல கனவுகளோடு படித்த எம் மாணவர்களின் உயிர் வலி உணர மறுப்பதும் குற்றமே என பதிவிட்டுள்ளார்.