மலையாள சினிமாவின் பிரபல இயக்குனராக இருந்தவர் லெனின் ராஜேந்திரன். கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு மேலாக மலையாள சினிமாவில் முக்கியமான சில படங்களை இயக்கி புகழ்பெற்ற இவர், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவு இந்திய சினிமாவுக்கு பேரிழப்பு என நடிகை மனிஷா கொய்ராலா தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
லெனின் ராஜேந்திரன் 2016ல் இயக்கிய ‘எடவாபதி’ என்கிற மலையாள படத்தில் கதாநாயகியின் அம்மாவாக மனிஷா கொய்ராலா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் நடிக்கும்போதுதான் கேன்சரின் பாதிப்பால் அவதிப்பட்டு சிகிச்சையும் எடுத்துக் கொண்டிருந்தார் மனிஷா கொய்ராலா. அந்த நேரத்தில் அவருக்கு முழு ஒத்துழைப்பு தந்து படப்பிடிப்பை நடத்தினாராம் லெனின் ராஜேந்திரன் என்பதையும் குறிப்பிட்டுள்ளார் மனிஷா கொய்ராலா.
இயக்குனர் லெனின் ராஜேந்திரன் கேரள திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் சேர்மனாக பதவி பொறுப்பு வகித்து வந்தார். கடந்த மே மாதம் தான் கேரளா முழுவதும் 150 கோடி ரூபாய் மதிப்பில் சிறிய அளவிலான 100 தியேட்டர்களில் கட்டுவதற்கான திட்டத்தைக் கொண்டுவந்து, அதற்கான ஏற்பாடுகளை கவனித்து வந்தார். அந்தவகையில் அவரது மறைவு மலையாள திரையுலகத்திற்கு பேரிழப்புதான்.

