மருதநாயகம் படத்தில் கமலுக்குப் பதில் விக்ரம் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கமலின் கனவுப் படம் மருதநாயகம். கடந்த 1997ம் ஆண்டு இதற்கான வேலைகள் மிகப் பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது. சில காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் பட வேலைகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பட்ஜெட் பிரச்சினையால் படப்பிடிப்பை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது. ஆனாலும், எப்படியும் கமல் மருதநாயகத்தை எடுத்து முடிப்பார் என அவரது ரசிகர்கள் நம்பி வந்தனர்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இது தொடர்பாக பதில் அளித்த கமல், ‘நிச்சயம் மருதநாயகம் படம் வரும். ஆனால் அதில் நான் இருக்க மாட்டேன்’ எனக் கூறி அதிர்ச்சி அளித்தார். தீவிர அரசியலில் ஈடுபட்டிருப்பதால் இந்தியன் 2 படம் தான் தனது கடைசி படம் என ஏற்கனவே கமல் கூறியிருக்கிறார்.
இதன் அடிப்படையில் பார்க்கையில், கமல் மருதநாயகம் படத்தை வேறு நடிகரை வைத்து முடிக்க திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. ஏற்கனவே படத்தின் முக்கியமான 30 நிமிடக் காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டது. அதன்பிறகு 12 ஆண்டுகளுக்கு பிறகு என்றுதான் காட்சிகள் விரிகின்றன. எனவே புதிய நடிகரை வைத்து படத்தை முடிப்பதில் எந்தக் குழப்பம் வராது என கமல் நினைக்கிறார் போலும்.
கமலின் இந்த பேச்சால் மருதநாயகம் படத்தில் நடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. கமலுக்கு பதில் விக்ரம் நடிக்க வாய்ப்பு உள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் உலா வருகிறது.
முன்னதாக விக்ரமை வைத்து கடாரம் கொண்டான் படத்தைத் தயாரித்திருந்தார் கமல். அப்படத்தில் விக்ரம் நடிப்பை கமல் பெரிய அளவில் பாராட்டினார். எனவே, தான் கற்பனை செய்து வைத்திருந்த மருதநாயகம் கதாபாத்திரத்தில் நடிக்க விக்ரம் தான் பொருத்தமான நடிகர் என கமல் நினைப்பதாகத் தெரிகிறது.
இந்தத் தகவல் எந்தளவிற்கு உண்மை என்பது அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிறகே தெரிய வரும்.

