தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் மற்றும் சென்னை கேரள சமாஜம் இணைந்து நடத்திய தென்னிந்திய மக்கள் நாடக விழா சென்னையில் நடந்தது. இதன் நிறைவு விழாவில் கலந்து கொண்டு நடிகர் ராஜேஷ் பேசியதாவது:
ஒரே மொழி, ஒரே நாடு என்பதெல்லாம் எனக்கு வியப்பாக இருக்கிறது. அமெரிக்கச் சுதந்திரப் போர் நடைபெறும்போது ஆளுகிறவனும் வெள்ளைக்காரன், போராடுகிறவனும் வெள்ளைக்காரன். எல்லாம் ஒரே ஜாதிதான். அவர்கள் ஜாதி பற்றி பேசிக் கொள்ளவில்லை. இரண்டு உலகப்போரிலும் ஈடுபட்ட நாடுகள் எல்லாமே கிறிஸ்தவ மதத்தைத் தழுவியவைதான்.
மொழி ஒரு மனிதனை இணைக்காது. மதம் ஒரு மனிதனை இணைக்காது. இனம் ஒரு மனிதனை இணைக்காது. ஐரோப்பா ஒரு கண்டம், பல நாடுகள். இந்தியா பல நாடுகளை கொண்ட ஒரு நாடு. வேற்றுமையில் ஒற்றுமை தான் இந்தியாவின் சிறப்பு.
இப்போதெல்லாம் பேசுவதற்கே பயமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் எல்லாருமே பெர்னாட்ஷாவாகவும் சர்ச்சிலாகவும் ஆகிவிடுகிறார்கள். கருத்துச் சுதந்திரத்தில் மக்கள் பங்கேற்பது வரவேற்கக் கூடியது. ஆனால், விமர்சனத்தை தாண்டி ஒரே நையாண்டியும் கிண்டலுமாகச் சமுதாயம் போய்க்கொண்டிருக்கிறது. இங்கு வந்ததும் என்னிடம் கையெழுத்து வாங்கினார்கள். இப்போதெல்லாம் கையெழுத்து போட்டாலே வழக்கு போட்டுவிடுகிறார்கள். என் மீது வழக்கு எதுவும் வராது என்று நம்புகிறேன். என்றார்.

