நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல், வார இதழ் ஒன்றில் எழுதி வரும் தொடரில் இந்தவாரம் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். குறிப்பாக மதுவிலக்கு குறித்து விமர்சித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது.
கொள்கை என்பது வேறு, திட்டம் என்பது வேறு; திட்டத்தின் பட்டியலே கொள்கை என நினைக்கிறார்கள். கிராம மேம்பாடு என்பதே எங்கள் கொள்கை; அங்கு என்ன செய்ய போகிறோம் என்பதே எங்கள் திட்டம். கிராம மேம்பாட்டை போல் விவசாய மேம்பாடு என்ற கொள்கையின் கீழ் பல திட்டங்களை வைத்துள்ளோம்.
மக்கள் நலம், தமிழகத்தின் வளம் தான் கொள்கை என வைத்தால் எத்தனை எத்தனை திட்டம் வேண்டுமானாலும் போடலாம். கல்வியில் முன்னோக்கி உள்ள தமிழகத்தை நீட் தேர்வு மூலம் மத்திய அரசு பின்னுக்கு இழுக்க வேண்டாம்.
ஒட்டுமொத்த சமுதாயத்தையும் மதுவை விரும்பாதவர்களாக ஆக்க முடியாது; அப்படி மாற்றினால் கள்ளினால் வரும் கொடுமைகளை விட பெரிய கொலைகள் பல நடக்கும். மதுவை உடனடியாக நிறுத்த உடம்பு கேட்காது; இது உடம்பு கேட்கும் வியாதி. குடிப்பதைக் குறைக்கலாம்; ஆனால் ஒட்டுமொத்தமாக நிறுத்த முடியுமா என்பது சந்தேகமாக இருக்கிறது. பெண்களின் ஓட்டுகளை வாங்க பூரண மதுவிலக்கு என்று அடிக்கடி பூச்சாண்டி காட்டாதீர்கள்.
இலவசம் கொடுப்பது சரியல்ல. ‘பசிக்கிறது’ என்றால், ‘வீட்டுக்கு வா, விருந்து வைக்கிறேன். ஆனால் அடிக்கடி வராதீர்கள்’ என்று சொல்வதுபோல் இருக்கின்றன உங்கள் இலவசங்கள். தினப்பசிக்கு மீன்பிடிக்க, விவசாயம் செய்ய, பழம் பறித்துத் தின்ன என்று… நிரந்தர ஏற்பாட்டுக்கு வழி பண்ணித்தர வேண்டும். அதைச் செய்யத்தான் நான் கிராமம் நோக்கி நடக்கிறேன்.
இவ்வாறு கமல் கூறியுள்ளார்.