தமிழக அரசு புறநகர் பகுதிகளில் புதிதாக 700 டாஸ்மாக் மதுக் கடைகளை திறக்க முடிவு செய்திருக்கும் அதே நேரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையட்டி 500 கடைகளை மூடவும் முடிவு செய்திருக்கிறது. இதற்காக விற்பனை குறைவாக உள்ள, பிரச்னைக்குரிய இடங்களில் உள்ள மதுக் கடைகளை கணக்கெடுத்து வருகிறது.
இந்த நிலையில் பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் இடையூறாக உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூடுங்கள் என்று விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
2016 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று நான்காவது முறையாக முதல் அமைச்சராக பதவியேற்ற ஜெயலலிதா படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று உறுதியளித்து, அதனை தொடங்கியும் வைத்தார். அவரின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 24 ஆம் தேதி 500 மதுக்கடைகளை தமிழக அரசு மூடவிருப்பதாக செய்திகள் வெளியாகிறது. இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.
ஆர்கே நகர் தொகுதிக்குட்பட்ட புது வண்ணாரப்பேட்டை – திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் க்ராஸ் ரோட் ஜங்ஷன் பகுதியில் அமைந்துள்ள இரண்டு மதுக்கடைகள் அங்கிருக்கும் பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக இருக்கின்றன. இந்த மதுக்கடைகளால் பெண்களும் மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இந்த மதுக்கடைகளை மூடச்சொல்லி அடிக்கடி போராட்டங்கள் நடைபெற்றாலும் அரசு இன்னும் அவற்றுக்கு செவி சாய்க்கவில்லை. எனவே மூடவிருக்கும் 500 மதுக்கடைகள் பட்டியலில் இந்த மதுக்கடைகளையும் சேர்க்க ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இதேபோல் தமிழ்நாடு முழுக்கவிருக்கும் பிரச்னைக்குரிய, பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் இடையூறாக இருக்கும் மதுக்கடைகளையும் இந்த பட்டியலில் சேர்க்க தமிழக அரசை வேண்டிக்கொள்கிறேன்.
இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்.