பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில், கடந்த ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வெற்றி அடைந்த படம் – ‘கடைக்குட்டி சிங்கம்’. இந்தப் படத்தை தொடர்ந்து கார்த்தி நடித்துள்ள படம் ‘தேவ்’.
‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் லக்ஷ்மண் தயாரித்திருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்கி உள்ளார். காதல் படமாக உருவாகி உள்ள இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்திருக்கிறார்.
அமெரிக்காவில் சொந்தமாக பிசினஸ் செய்யும் பெண் தொழில்அதிபராக நடித்திருக்கிறாராம் ரகுல். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ள இப்படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. கார்த்தியின் ‘தேவ்’ படம் காதலர் தினமான பிப்ரவரி 14-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாக இருக்கிறது.
கார்த்தி நடிக்கும் ஒரு படம் காதலர் தினத்தன்று வெளியாவது இதுதான் முதல் முறை. தேவ் படத்தை காதலர் தினத்தன்று வெளியிட வேண்டும் என்று தயாரிப்பாளர் பிடிவாதமாக இருந்தாராம். காரணம் தேவ், பக்கா லவ் ஸ்டோரி. பையா படம் போல் கார்த்திக்கு பெயர் வாங்கிக்கொடுக்கும் என்றும் சொல்கிறார்கள்.