பேர்ஸ்டோவ், உட் அரைசதம் விளாச, கிறைஸ்ட்சர்ச் டெஸ்டில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 290/8 ரன்கள் எடுத்தது.
நியூசிலாந்து சென்றுள்ள இங்கிலாந்து அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வென்ற நியூசிலாந்து, 1–0 என, தொடரில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட், கிறைஸ்ட்சர்ச்சில் துவங்கியது. ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன், பீல்டிங் தேர்வு செய்தார்.
சவுத்தீ அபாரம்
இங்கிலாந்து அணிக்கு குக், ஸ்டோன்மேன் ஜோடி மோசமான துவக்கம் தந்தது. குக் (2), பவுல்ட்டிடம் சரிய, ‘வேகத்தில்’ மிரட்டிய சவுத்தீயிடம், ஸ்டோன்மேன் (35), வின்ஸ் (18), கேப்டன் ஜோ ரூட் (37) என, வரிசையாக சிக்கினர். மாலன் (0), ஸ்டோக்ஸ் (25), பிராட் (5) கைவிட்டனர்.
‘பெஸ்ட்’ கூட்டணி
இங்கிலாந்து அணி 164 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது. பின், பேர்ஸ்டோவ், மார்க் உட் இணைந்து, அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர். இருவரும் அரைசதம் அடித்தனர். இந்நிலையில், மீண்டும் மிரட்டிய சவுத்தீயிடம், உட் (52) வீழ்ந்தார்.
முதல் நாள் முடிவில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 290 ரன்கள் எடுத்திருந்தது. பேர்ஸ்டோவ் (97), லீச் (10) அவுட்டாகாமல் இருந்தனர். நியூசிலாந்து சார்பில் சவுத்தீ 5, பவுல்ட் 3 விக்கெட் சாயத்தனர்.