ராம் இயக்கத்தில் மம்மூட்டி நாயகனாக நடித்துள்ள படம் பேரன்பு. பிப்ரவரி 1-ந்தேதி திரைக்கு வரும் இந்த படத்தில் மம்முட்டியுடன் அஞ்சலி, சாதனா, அஞ்சலி அமீர், சமுத்திரகனி உள்பட பலர் நடித்துள்ளார்கள்.
இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் காட்சியில் பங்கேற்ற மம்முட்டி பேசும்போது, பத்து வருடங்களுக்குப்பிறகு மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறேன். இந்த படத்தின் கதையை டைரக்டர் ராம் சொன்னபோது பிடித்துப்போனது. ஒரு அப்பா – மகளுக்கான கதை. பிறவியிலேயே கை – கால்கள் ஊனமாக பிறகும் ஒரு குழந்தை. அதன்காரணமாகவே அவளது தாய் வேறொருவருடன் ஓடிப்போய் விடுகிறார்.
இப்படியான சூழ்நிலையில், அந்த குழந்தையை தந்தை எப்படி வளர்க்கிறார் என்ற இந்த கதை என்னை ரொம்பவே பாதித்தது. கஷ்டப்பட்டு நடித்தேன் என்று சொல்வதை விட இயல்பாக நடித்தேன். அதேபோல் எனக்கு மகளாக நடித்துள்ள சாதனாவும் இந்த கேரக்டருக்காக ரொம்பவே உழைத்திருக்கிறார். அஞ்சலி ஒரு முக்கியமான கேரக்டரில் வந்து கதைக்கு பலம் சேர்த்துள்ளார்.
அந்தவகையில் ஒரு நல்ல உணர்வுப்பூர்வமான படத்தை எடுத்திருக்கிறார் டைரக்டர் ராம். இதுவரை இந்த படம் எங்களிடம் இருந்தது. இப்போது உங்களிடம் ஒப்படைத்து விட்டோம். நீங்கள் நல்லபடியாக மக்களிடம் கொண்டு சேர்ப்பீர்கள் என்று நம்புகிறோம் என்றார்.